சிஸ்கே Vs எம்ஐ: வைரலாகும் தோனியின் சாகசம்: "எலிப்பொறியில் சிக்கிய பொல்லார்ட்"!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:41 IST)
மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் 33வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியை வீழ்த்தியது.156 ரன்களை துரத்திய சிஎஸ்கே அணி, 2.3 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை பெற்றது.

மும்பை இண்டியன்ஸ் மேலும் ஆதாயம் பெறும் முன்பாக, ராபின் உத்தப்பாவும் அம்பதி ராயுடுவும் கைகோர்த்து சிஎஸ்கே அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றினர்.இந்த ஆட்டத்தில், தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், தான் ஒரு 'பெஸ்ட் பினிஷர்' என்பதை 40 வயதிலும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார் தோனி. ஆட்டம் முடிந்ததும் தோனியை சக வீரர்கள் ஆரத் தழுவினர்.
 
ஆனால் கேப்டன் ஜடேஜாவோ தனது தொப்பியை கழற்றி தோனிக்கு தலை வணங்கிய செயல், ரசிகர்களை கரகோஷம் எழுப்பச் செய்தது.
 
'ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ' என வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த முறை ரன்களை வாரி வழங்கிய கிறிஸ் ஜோர்டன் இந்த முறை அணியில் இல்லை. அவருக்கு பதிலாக பிரிட்டோரியசும், மொயின் அலிக்கு பதில் மிட்செல் சான்ட்னரும் கொண்டு வரப்பட்டனர்.
 
இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலக நட்சத்திரங்களும் பிரபலங்களும் ட்விட்டர் தளத்தில் போற்றிக் கொண்டாடி ட்வீட்டுகளை பகிர்ந்தனர். அவற்றின் விவரம்:
 
ஐபிஎல் தனது பக்கத்தில் தோனி தனது ஸ்டைலில் ஆட்டத்தை நிறைவு செய்தார் என்று குறிப்பிட்டிருந்தது.
 
சுரேஷ் ரெய்னா, சிறப்பாக ஆடினீர்கள் தோனி என்றும் வீரேந்தர் ஷேவாக் ஓம் ஃபினிஷாய நமஹா, என்ன ஒரு கடைசி ஆட்டம், ரொம்ப நல்லா என்று குறிப்பிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேபோல பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்களும் சிஎஸ்கே அணியின் வெற்றியையும் தோனியின் செயல்திறனையும் பாராட்டி இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.
 
ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் களத்துக்கு வந்த பொல்லார்ட், சிக்ஸ் அடித்து சிஎஸ்கேவை திணற வைத்தார்.
 
இனி அவ்வளவுதான் என்று ரசிகர்கள் நினைத்த வேளையில், பொலார்டுக்கு பவுண்டரி லைனில் அவருக்கு நேராக ஃபீல்டரை வைத்தார் தோனி. அப்போது தீக்சணா பந்துவீச்சை தூக்கி அடித்து தோனி வைத்த பொறியில் எலி போல் சிக்கினார் பொல்லார்ட் என்று இந்த ஆட்டத்தின் சிறப்பாக கிரிக்கெட் ஆர்வலர்கள் விமர்சித்து வரவேற்றனர்.
 
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பொல்லார்ட்டை வீழ்த்த, இதேபோன்ற உத்தியை அப்போது ஆடுகளத்தில் இருந்த தோனி கையாண்டார்.
 
அப்போதும் தோனியின் உத்திகளை அறியாதவராக பொல்லார்ட் தோல்வியடைந்த நிகழ்வு பற்றிய தகவல்களையும் சில கிரிக்கெட் ஆர்வலர்கள், சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்