ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் - சேலத்தில் புதிய நெருக்கடி

Webdunia
புதன், 5 மே 2021 (14:09 IST)
தமிழகத்தில் கொரானா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் வரும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். 500-க்கும் மேற்பட்டோர் கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா கிச்சைக்காக நூற்றுக்கணக்கானோர் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் ஆம்புலன்ஸில் வந்ததால் மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

என்ன நடக்கிறது சேலம் அரசு மருத்துவமனையில்?

சேலம் அரசு மருத்துமனையை பொறுத்தவரையில், 650 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. தற்போது அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு அங்கு இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் என்பது தான் இதில் வருத்தமளிக்கும் செய்தி.

ஏற்கெனவே சிகிச்சை பெற்று வரும் கொரானா நோயாளால் படுக்கைகள் நிரம்பி விட்டதால் புதிதாக சிகிச்சைக்கு வந்தவர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க இயலாமல் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிகிச்சைக்கு வந்தவர்களில் சிலர் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அரசு மருத்துவமனை முழுவதும் கொரானா சிகிச்சை மையங்களாக மாற்றினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என அங்கிருந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை டீன் முருகேசன் என்ன சொல்கிறார்?

"அரசு மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளது. ஆனால் இடைவிடாது நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக நோயாளிகளை ஆம்புலன்ஸில் சிகிச்சையளித்து காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதித்து வருகிறோம்.

மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அது தயாராகிவிடும். அப்போது நிலைமையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்.

தற்போது கொரோனோ தொற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்றார் சேலம் மருத்துவமனை முதல்வர் முருகேசன் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்