லெபனான் பள்ளியில் மகள் இருந்தபோது பெற்றோரை சிரியாவுக்கு நாடு கடத்திய ராணுவம் - சோகக்கதை

Webdunia
வியாழன், 18 மே 2023 (22:11 IST)
இவரது பெற்றோர் சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது அவர்களை வழியனுப்பி வைக்கக் கூட ரகாத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
ரகாத்தின் அத்தையின் வீட்டை அடைய லெபனான் மலைகளைக் கடந்து நாம் சென்றபோது நாம் பயணித்த காரில் ஒருவித தயக்கவுணர்வு மேலோங்கியிருந்தது. தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மற்றும் தாய், தந்தையை மீண்டும் எப்போது பார்ப்போம் என்றே அறியாத ஒரு சிறுமியிடம் பேசுவது மிகவும் நுட்பமான பணியாகவே இருக்கும்.
 
ஆனால் ரகாத்தைப் பார்த்தவுடனேயே எங்கள் பதற்றம் குறைந்தது. ரகாத் பளீச் ஆடைகளை அணிந்து, குதிரைவால் போல தனது தலை முடியை கட்டியிருந்தாள். இயல்பான புன்னகை, விரிந்த கண்களுடன் எங்களை அவள் பார்த்தபோது, அவளது அமைதியான நிலை எங்களுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது.
 
ரகாத் அரிதாகவே பேசினாள். அதனால் அவளுக்கு என்ன நடந்தது என்பதை அவளது மாமா எங்களிடம் கூறினார். அவர் பேசுவதை கவனமாக ரகாத் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பேச்சின்போது அவளுக்கு ஏழு வயது என்று அவளது மாமா சொன்னபோது குறுக்கிட்ட ரகாத், தனக்கு எட்டு வயது என்று வலியுறுத்தினார். அது இளகிய மனம் நடத்திய விவாதம் போல இருந்தது. கொடுமையிலும் சிரிப்பை வரவழைத்த கதை போல.
 
இப்போது ரகாத்தின் பெற்றோர் வேறு நாட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வாய்ப்பு கூட இவளுக்கு கிடைக்கவில்லை.

ரகாத் பிபிசி செய்தியாளர் கேரைன் டார்பேயிடம் தனது தந்தையுடன் பேசப் பயன்படுத்தும் செல்பேசியை காட்டுகிறார்
 
ரமலான பண்டிகைக்கு சரியாக இரண்டு தினங்களுக்கு முன், ஏப்ரல் 19 காலை 9 மணி இருக்கும்… பல ஆண்டுகளாக லெபனானில் வாழ்ந்து வரும் சிரியாவைச் சேர்ந்த சிறுமி ரகாத்தின் வீட்டுக்குள் ராணுவம் நுழைந்தது.
 
அவளுடைய பெற்றோரின் ஆவணங்கள் காலாவதியாகி இருந்தன. அதை காரணம் காட்டி, முன்னறிவிப்பு ஏதுமின்றி ரகாத்தின் வீட்டுக்குள் நுழைந்த லெபனானிய ராணுவம், அவளது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை கைது செய்தது. பிறகு அவர்கள் சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
 
“ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என உங்களிடம் என்னென்ன உள்ளனவோ அவற்றையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று லெபனான் ராணுவம் எங்களிடம் கூறியதாக பிபிசி செய்தியாளரிடம் அவரது செல்பேசியில் மறுமுனையில் பேசிய ரகாத்தின் தந்தை கண்கலங்கியவாறு கூறினார்.
 
அப்போது காலை 9 மணி இருக்கும். ரகாத் பள்ளியில் இருந்தாள் என்று கூறிய ரகாத்தின் தந்தை, எங்களுடைய மகள் வரும் வரை கொஞ்சம் காத்திருக்க அனுமதி கொடுங்கள் என்று மன்றாடினார். ஆனால், ராணுவம் செவி சாய்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
பள்ளி முடித்து வழக்கம்போல் வீடு திரும்பிய ரகாத், வீட்டின் கதவை பலமுறை தட்டியும் யாரும் திறக்காததால் பயத்தில் அழ தொடங்கினாள். "எனக்கு பயமாக இருக்கிறது" என்று அவள் அலறினாள்.
 
சிறுமியின் அழுகுரலை கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர், அதே பகுதியில் சிறிது தூரத்தில் வசித்து வரும் ரகாத்தின் அத்தையை அழைத்து வந்தார். ரகாத் தற்போது தன் அத்தை - மாமாவின் அரவணைப்பில் தான் இருந்து வருகிறாள்.
 
லெபனானில் சட்டவிரோதமாக வசித்துவரும் சிரியாவைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தான், சிறுமி ரகாத்தின் குடும்பத்தினர் மீது லெபனான் ராணுவம் கடந்த மாதம் அப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
 
உள்நாட்டு போரின் முக்கிய இடமாகவும், கிளர்ச்சிப் படையினரின் முக்கிய கோட்டையாகவும் இந்த நகரம் விளங்குகிறது. எனவே உயிருக்கு அஞ்சி, 12 ஆண்டுகளுக்கு முன் லெபனானுக்கு இடம்பெயர்ந்தது இக்குடும்பம். சிறுமி ரகாத் லெபனானில் தான் பிறந்தார்.
 
"இப்படி 12 ஆண்டுகளாக ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டு திடீரென்று உதைத்து வெளியேற்றப்பட்ட எங்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்," என்று கூறும் ரகாத்தின் தந்தை, போர் சூழல் காரணமாக சிரியாவில் உள்ள தங்களது சொந்த நகருக்கு திரும்ப முடியவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
 
ஆனாலும், லெபனான் ராணுவத்தால் சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட ரகாத் குடும்பத்தினர், தற்போது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நண்பர்களுடன் வசித்து வருகின்றனர்..
 
பிக்பாயாவின் மேயர், நிக்கோல் ஜெமாயல், தனது நகரத்தில் சிரியர்கள் மீது விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பாதுகாக்கிறார்
 
சிரியாவைச் சேர்ந்த அகதிகளுக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ள எதிர்ப்புகளின் விளைவாக, அவர்களை தாயகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் லெபனான் அரசு அதிகாரிகள்.
 
நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது, உலக அளவில் அதிக எண்ணிக்கையில் அகதிகளை கொண்டுள்ள தேசமாக லெபனான் விளங்குகிறது. ஐ.நா பதிவேட்டின்படி, சிரியாவைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் லெபனானில் அகதிகளாக உள்ளனர்.
 
ஆனால் இந்த எண்ணிக்கை ஐ.நா. குறிப்பிடுவதை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் லெபனான் அதிகாரிகள்.
 
சமீபகாலமாக நாடு கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், இனியும் சிரியா அகதிகளை தங்களால் தூக்கிச் சுமக்க முடியாது என்று லெபனான் நாட்டினர் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.
 
அத்துடன் அடிப்படை வாழ்வாதார சேவைகளை பெறுவதில் சிரியா நாட்டினரால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
 
நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், லெபனானில் வசித்துவரும் சிரியாவைச் சேர்ந்தவர்களின் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதாக லெபனான் நாட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள்தொகை சமநிலைக்கு அச்சுறுத்தல் இருப்பதுடன், நாட்டில் குற்றங்களும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
லெபனான் மக்களின் இதுபோன்ற கூக்குரல்கள், சிரியா அகதிகள் மீதான நடவடிக்கைகளை கடுமையாக்கும் நிலைக்கு அந்நாட்டு அரசை தள்ளியுள்ளது.
 
சிரியா அகதிகள் வசிக்கும் ஓர் நகரமான பிக்பாயா, பெய்ரூட்க்கு அருகே உள்ள மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை இனவெறி நடவடிக்கை என்று வலதுசாரி குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.
 
ஆனால், “சிரியா அகதிகளை லெபனான் வரவேற்றதைப் போல, உலகின் வேறு எந்த நாடும் வரவேற்றதில்லை” என்கிறார் பிக்பாயா நகர மேயர் நிக்கோல் ஜெமாயல்.
 
சிரியாவில் தற்போது பெரிய அளவில் ராணுவ மோதல்கள் இல்லாததால், லெபனானில் ஆண்டுக்கணக்கில் அகதிகளாக உள்ளவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பலாம் என்ற குரல்களும் லெபனானில் ஓங்கி ஒலித்து வருகின்றன..
 
மேலும் இந்த நடவடிக்கை, சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை நோக்கிய லெபனானின் அரசியல் முன்னெடுப்பாகவும் பார்க்கப்படுகிறது.
 
பெருகி வரும் குற்றங்கள், நிதி மற்றும் பொருளாதார சுமை உள்ளிட்ட காரணிகளே, சிரியா அகதிகள் பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தங்களின் முடிவுக்கு முக்கிய காரணம் என்று லெபனான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
 
தங்களது நாட்டு எல்லையில் நிகழ்ந்துவரும் சட்டவிரோத ஊடுருவல்கள் குறித்தும் அச்சம் தெரிவிக்கும் அவர்கள், லெபனான் ராணுவம் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டே அகதிகளை சிரியாவுக்கு திரும்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் கூறுகின்றனர். ஆனால் அகதிகளுக்கு தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் அச்சம் நீடித்து வருகிறது என்றும் லெபனான் அரசு தெரிவிக்கின்றது.
 
சிரியா அகதிகள் லெபனானை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு சில வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தான் காரணம் என்று, லெபனானில் உள்ள சில முக்கிய அரசியல் கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன.
 
சிரியா அகதிகளுக்கு ஐ..நா. அளித்துவரும் உதவிகளே அவர்களை தொடர்ந்து லெபனானில் இருப்பதற்கான ஊக்கத்தை அளிக்கிறது என்பது அக்கட்சிகளின் முக்கிய வாதமாக உள்ளது.
 
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, சிரியாவில் இன்னும் நிலைமை பாதுகாப்பானதாக இல்லை என்று எச்சரித்துள்ளது. லெபனானில் இருக்கும் அகதிகள் சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே சிரியாவுக்கு திரும்ப வேண்டும் என்றும் ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது.
 
இப்படி, லெபனானில் உள்ள சிரியா அகதிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தனது பெற்றோரை பிரிந்து வாழும் சிறுமி ரகாத்துக்கு இந்த வாதங்கள் எல்லாம் தேவையற்றவை. பெற்றோருடன் மீண்டும் இணைந்து தனது தாய் நாடான சிரியாவில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே அவளின் விருப்பமாக இருக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்