தமிழ் சினிமாவின் ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கிறதா?

Prasanth Karthick
வியாழன், 21 நவம்பர் 2024 (13:34 IST)

‘பான் இந்தியா’ திரைப்படங்கள், இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் விளம்பரம் செய்யப்பட்டு, ஒரே நாளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

 

 

ஒரு குறிப்பிட்ட மொழியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் அந்த மொழியில் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி மொழிமாற்றம் செய்யப்பட்டு பிற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டு, வெற்றி பெறுவது இந்திய சினிமாவில் புதிதல்ல.

 

தமிழ் மொழியில் உருவாகி, இந்தி, தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்ற ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘இந்தியன்’ போன்ற திரைப்படங்களை சான்றாகச் சொல்லலாம். சமீபத்திய உதாரணமாக மலையாள மொழியில் உருவாகி, தமிழிலும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

 

ஆனால், மேற்கூறிய இந்தத் திரைப்படங்கள் ‘பான் இந்தியா’ என்ற அடையாளத்துடன் உருவாக்கப்படவில்லை. அவை அந்தந்த மொழி பேசும் மக்களுக்காக எடுக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டவை.

 

தமிழ் சினிமாவின் பான் இந்தியா திரைப்படங்கள்
 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் 2015 மற்றும் 2017இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு, பான் இந்தியா என்ற அடையாளத்துடன் படங்கள் வெளியாவது அதிகரித்தது.

 

அதைத் தொடர்ந்து பான் இந்தியா அடையாளத்துடன் வெளியிடப்பட்ட கேஜிஎஃப் பாகம் 1 மற்றும் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கல்கி 2898 ஏடி போன்றவை வசூல் ரீதியாகச் சாதனை படைத்தன.

 

ஆனால் 1990களிலேயே பிற மொழிகளிலும் வெற்றி பெறக்கூடிய படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவில் வெளியான லியோ, இந்தியன் 2, கங்குவா போன்ற ‘பான் இந்தியா’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

 

 

“விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான், ஆனால் அது பிற மொழி ரசிகர்களால் கொண்டாடப்படவில்லையா?

 

எனவே ஒரு நல்ல படைப்பு தனக்கான ரசிகர்களிடம், மொழிகளைக் கடந்தும் சென்றடையும். அதற்கு பான் இந்தியா அடையாளம் தேவையில்லை” என்கிறார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார்.

 

இவர், விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று, நேற்று, நாளை’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.

 

“நமது ரசிகர்களை முதலில் திருப்திப்படுத்த வேண்டும். இது தமிழுக்கு மட்டுமல்ல, அந்தந்த மொழிப் படங்களுக்கும் பொருந்தும். பாகுபலிக்கு முன்பாகவே ராஜமௌலி எடுத்த மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் தெலுங்கு ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்று, பின்னர் பிற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றன” என்கிறார் ரவிக்குமார்.

 

பிற மொழி நட்சத்திரங்கள் இருந்தால் மட்டுமே அது பான் இந்தியா திரைப்படம் ஆகாது என்று கூறும் ரவிக்குமார், “வேட்டையன் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா இருப்பதால் அது பான் இந்தியா திரைப்படம் ஆகிவிடாது. பிறமொழி நடிகர்கள் தமிழ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது பல ஆண்டுகளாகத் தொடரும் ஒன்றுதானே” என்கிறார்.

 

‘ஒரு திரைப்படத்தின் வகை (Genre) முக்கியம்’

 

கழுவேத்தி மூர்க்கன், ராட்சசி ஆகிய படங்களை இயக்கிய கௌதம் ராஜ் பிபிசியிடம் பேசுகையில், “ஹாலிவுட்டில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 500 முதல் 600 திரைப்படங்கள் உருவாகின்றன என்றால், அவை அனைத்துமே இந்தியா போன்ற நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதில்லை.”

 

“குறிப்பிட்ட வகையான ஆக்ஷன் (Action), அறிவியல் புனைகதை (Science fiction), ஹாரர் (Horror) திரைப்படங்களை மட்டுமே டப் செய்கிறார்கள். எனவே எந்த வகையான (Genre) படத்தை ‘பான் இந்தியாவாக’ அடையாளப்படுத்துகிறோம் என்பது முக்கியம்” என்று கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “அதிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast and furious) போன்ற ஆக்ஷன் படங்கள் என்றால் தமிழ்நாட்டின் சிறு ஊர்களில்கூட டப் செய்து திரையிடுவார்கள். ஆனால் அறிவியல் புனைகதை, ஹாரர் வகை திரைப்படங்கள் எல்லா ஊர்களிலும் வெளியாகாது” என்று தெரிவித்தார்.

 

 

அப்படியிருக்க எந்த வகையான திரைப்படம் என்பதில் ஒரு தெளிவில்லாமல், காதல், ஆக்ஷன், காமெடி, என அனைத்தையும் கலந்து, பிற மொழி நட்சத்திரங்களை வைத்து எடுத்து, அதை ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கூறி மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடும்போது அது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறுவதாகக் கூறுகிறார் கௌதம் ராஜ்.

 

‘பான் இந்தியா’ என்பது பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் வணிகத்தை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுவதாகக் கூறுகிறார் கௌதம் ராஜ்.

 

“மொழிமாற்றம் செய்தால் வெற்றியடையாத சில திரைப்படங்கள், ரீமேக் செய்யப்பட்டால் மிகப்பெரிய வெற்றி பெறும். எனவே இதெல்லாம் இருந்தால்தான் ‘பான் இந்தியா’ படம் என்ற முன்முடிவுகளோடு அணுகாமல், ஒரு குறிப்பிட்ட வகையை (Genre) முடிவு செய்து, எடுத்தாலே போதுமானது” என்கிறார்.

 

இயக்குநர் ஒருவர் தனக்கான வணிகச் சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளவும் இந்த ‘பான் இந்தியா’ அடையாளம் உதவுவதாகக் கூறும் அவர், அதற்கு உதாரணமாக பாகுபலி இரண்டு பாகங்கள் வெளியான பிறகு ராஜமௌலிக்கும், கேஜிஎஃப் இரு பாகங்களும் வெளியான பிறகு பிரசாந்த் நீலுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பைச் சுட்டிக்காட்டுகிறார்.

 

“இதை தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர் போன்றோர் பல வருடங்களுக்கு முன்பே செய்துள்ளார்கள். முன்னணி நடிகர்களை மட்டுமே சார்ந்திருக்கும் சினிமா வணிகம் இயக்குநர்கள் கைகளுக்குச் செல்ல இது உதவும்” என்று கூறுகிறார் கௌதம் ராஜ்.

 

‘பலவீனமான திரைக்கதைகள்’

 

எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன் பாலா, பான் இந்தியா திரைப்படங்கள் எனத் தனித்து அடையாளப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பிபிசியிடம் பேசினார். சென்னையில் ஒரு நாள், மனிதன், லக்ஷ்மி, தலைவி, உயிர் தமிழுக்கு போன்ற தமிழ் படங்களில் இவர் பங்காற்றியுள்ளார்.

 

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் திரைக்கதை முக்கியமானது. ஒரு பலமான கதை, பெரிய நட்சத்திரங்கள், அதில் பிறமொழி நட்சத்திரங்களையும் சேர்த்து, மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், மிகப் பெரிய பட்ஜெட், ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று பிற மொழிகளில் விளம்பரம், இப்படி எல்லாவற்றையும் செய்து, கடைசியாக பலவீனமான திரைக்கதையால் அனைத்தும் வீணாகிவிடுகிறது” என்கிறார் அஜயன் பாலா.

 

 

பாகுபலி, கேஜிஎஃப் திரைப்படங்களில் அதீத உணர்ச்சியை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் அஜயன், “ஒரு வீரமான, அதே நேரத்தில் எல்லாவித உணர்ச்சிகளும், குறிப்பாக தாய்ப்பாசம் அதிகம் கொண்ட இளைஞனாக நாயகன் சித்தரிக்கப்பட்டது மக்களுக்குப் பிடித்தது. இது பல படங்களில் முன்பே வந்த கதைதான், ஆனால் பலமான திரைக்கதை மூலம் தாங்கள் சொல்ல வந்ததை அந்த இயக்குநர்கள் அழுத்தமாகச் சொன்னார்கள்” என்றார்.

 

ஒரு கதையில் நாயகன் தரப்பு நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், அவன் கோபம் கொண்டாலோ அல்லது அழுதாலோ, அது மக்களுக்குள் தாக்கம் செலுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் அவர், கங்குவா, இந்தியன் 2, லியோ போன்ற படங்கள் இதில் சறுக்கிவிட்டதாகக் கூறுகிறார்.

 

பிறமொழி ரசிகர்கள் கூறுவது என்ன?

 

கேரள மாநிலத்தில் வெகுகாலமாக தமிழ் திரைப்படங்கள், மொழி மாற்றம் செய்யப்படாமலே வெளியாகின்றன. கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த தாரிக் அகமத். மலையாள திரைத்துறையில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றும் இவர், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

 

“மலையாள ரசிகர்கள் ‘கமல்ஹாசனை’ தமிழ் நடிகராகப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தமிழில் முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பே அவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இந்தியன் 2 இங்கே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதேபோலத்தான் சூர்யாவையும் அதிகம் கொண்டாடுவார்கள். ஆனால் கங்குவா திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது” என்று கூறுகிறார் தாரிக்.

 

சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தைக் குறிப்பிட்டுப் பேசிய தாரிக், “அதில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை, பிறமொழி நட்சத்திரங்கள் இல்லை, பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. ஆனால் அந்தப் படத்திற்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என் நண்பர்கள் பலரும் படம் இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம் என வருத்தப்பட்டார்கள்” என்கிறார்.

 

பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் மெய்யழகன். படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், படத்தின் நீளம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.

 

 

பிறகு 2 மணிநேரம் 57 நிமிடமாக இருந்த திரைப்படத்தில் இருந்து, 18 நிமிடம் 42 நொடிகளுக்கான காட்சிகள் நீக்கப்பட்டு, 2 மணிநேரம் 38 நிமிடங்கள் நீளமுள்ள படமாகத் திரையிடப்பட்டது.

 

“மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை” என மெய்யழகன் படத்தின் இயக்குநர் பிரேம்குமார் அப்போது தெரிவித்திருந்தார்.

 

“திரைப்படம் நன்றாக இருந்தால் போதும். அதில் யார் நடித்திருந்தாலும் மலையாள மக்கள் அதைக் கொண்டாடுவார்கள். எனவே பான் இந்தியா என்ற விஷயம் இங்கே அதிகம் எடுபடுவதில்லை. அப்படிப்பட்ட அடையாளத்துடன் மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ தோல்வி அடைந்தது” என்று குறிப்பிடுகிறார் தாரிக்.

 

டெல்லியில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் சத்யம் சிங், சிறு வயதிலிருந்தே மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர். மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வட இந்தியாவில் நீண்டகாலமாகவே நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

 

“சில வருடங்களுக்கு முன்பு இங்கு தென்னிந்திய திரைப்படங்கள் இப்போது வெளியாவது போலப் பெரிய அளவில் வெளியாகாது, அதாவது பான் இந்தியா திரைப்படம் என்ற பெயரில் அதிக விளம்பரங்கள் செய்யப்படாது. சத்தமில்லாமல் சில திரையரங்குகளில் மட்டுமே மொழி மாற்றம் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும்.”

 

“அதுவும் அதன் அசல் மொழியில் வெளியாகிப் பல நாட்கள் கழித்தே இங்கு வெளியாகும். பெரும்பாலும் மக்கள் அதை தொலைக்காட்சியில் பார்த்தே ரசிப்பார்கள். ரோஜா, பாம்பே, போன்ற சில படங்கள் மட்டுமே விதிவிலக்காக இருந்தன” என்கிறார்.

 

ஆனால், பாகுபலிக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டதாகக் கூறும் அவர், “இப்போது அவை ஷாரூக், சல்மான் போன்ற முன்னணி இந்தி நடிகர்களின் படங்களுக்கு இணையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதில் நடித்த இந்தி நடிகர்களின் முகங்கள் போஸ்டரில் முதன்மையாக இருக்கும்” என்றார்.

 

“முன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு டப் செய்யப்பட்ட தென்னிந்திய படத்தை திரையரங்கில் அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், இப்போது பெரும் எதிர்பார்ப்போடு வெளியான முதல் நாளே சென்று பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?” என்றும் சத்யம் சிங் கேள்வி எழுப்புகிறார்.

 

‘பான் இந்தியா’ படங்கள் மீதான எதிர்பார்ப்பு

 

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான அவினாஷ் ராமச்சந்திரன், “கோல்டுமைன்ஸ் (Goldmines) எனும் ஊடக நிறுவனம் ஒன்று, தனது யூடியூப் சேனலில் அஞ்சான் படத்தை இந்தி ரசிகர்களுக்கு ஏற்றாற்போல எடிட் செய்து, திரைக்கதைப் போக்கை மாற்றி வெளியிட்டது. அதை ஒரு கோடியே 70 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவோர் உதாரணம் மட்டும்தான்” என்கிறார்.

 

ஆனால் “அதையே ஒரு பான் இந்தியா திரைப்படமாக, அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி, அதீத எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வந்து, தமிழில் வெளியான அதே பதிப்பை (இந்திக்கு என்று தனியாக எடிட் செய்யாமல்) பார்த்திருந்தால் இந்த ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே” என்கிறார்.

 

 

அதேசமயம் “தமிழ் சினிமாவில் அதீத உணர்ச்சிகளுடன் அல்லது நம்ப முடியாத காட்சிகளுடன் படம் எடுத்தால், படம் கேலி செய்யப்படும் என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் தெலுங்கில், இந்தியில் அப்படியில்லை.”

 

“எனவே ‘பான் இந்தியா’ என்று வரும்போது, அதீத உணர்ச்சிகளுடன் கூடிய ஆக்ஷன் படமோ அல்லது மென் உணர்வுகளைப் பேசும் படமோ, திரைக்கதையில் கவனம் செலுத்தினாலே போதும்” என்று கூறுகிறார் அவினாஷ் ராமச்சந்திரன்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்