சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார்.
“நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது."
அந்த சமயத்தில், புனேவில் உள்ள மக்களால் நிறுவப்பட்ட `கிராஸ் லேண்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சித்தேஷ் அந்த பகுதியில் நடந்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தான் அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. பின்னர், அந்த பகுதியில் பல நிறங்களில் விலங்குகள் காணப்பட்டது பற்றி அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்கள் அனைவரும் இதுகுறித்து மேலும் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்தனர்.
`கிராஸ் லேண்ட் அறக்கட்டளையின் நிறுவனர் மிஹிர் காட்போல் கூறுகையில், “ கொரோனாவின் போது பொதுமுடக்க நாட்களில், புனே அருகே மற்றொரு மஞ்சள் நிற விலங்கைப் பார்த்தோம். பின்னர் ஒரு பெண் விலங்கை பார்த்தோம். அது ஓநாய் போல தோற்றமளித்தது. ஆனால் அதன் தோலில் கோடுகள் இருந்தன.
விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் மற்றும் வனத்துறையின் அனுமதியுடன், அவர்கள் விலங்குகளின் முடி மற்றும் மலம் ஆகியவற்றை சேகரித்தனர். நிச்சயமாக, இந்த பணி எளிதானது அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள்.
மிஹிர் கூறுகையில், “ஓநாய் ஒரு உன்னதமான அதேசமயம் மர்மமான உயிரினம். அவை மனித குடியிருப்புகளுக்கு அருகில் ஒன்றாக வாழ்வதால், ஓநாய்கள் மக்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவை. எனவே, நாங்கள் அதை எளிதாக கண்காணித்தோம்.
"அவற்றின் நடமாட்டம், அவற்றின் இருப்பிடம் எங்கே, அந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறும்போது எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தோம். அதனால்தான் இந்த வினோதமான விலங்கின் முடி மற்றும் மலத்தை எங்களால் சேகரிக்க முடிந்தது.” என்கிறார்.
மரபணு வரிசைப்படுத்தலுக்குப் பிறகு, அவர்களின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விலங்கு ஒரு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதியானது.
இத்தகைய விலங்குகள் 'ஓநாய்-நாய்கள்' ('wolf-dogs') என்று அழைக்கப்படுகின்றன. இந்த கலப்பின விலங்கு `wolfdogs எனப்படும் இனங்களில் இருந்து வேறுபட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற உறுதியான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த ஆய்வு மேலும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளது - இந்த கலப்பின விலங்கு புதிய சந்ததிகளை உருவாக்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி அறிக்கை, தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட், அசோகா டிரஸ்ட் ஃபார் எக்காலஜி அண்ட் என்விரன்மென்ட் (ATREE) மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) ஆகியவற்றால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
ஓராண்டுக்குப் பிறகு, ஓநாய் பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இந்த கலப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த மதிப்பாய்வு, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமா என்றும், ஏன் அதிக ஆராய்ச்சி தேவை என்பதையும் ஆராய்கிறது.
புல்வெளிக்காடுகளின் மன்னர்கள்
சாம்பல் ஓநாய்கள் (wolf) உலகெங்கிலும் புல்வெளிகள், காடுகள், பனிப்பிரதேசம் அல்லது பாலைவனங்கள் என பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கின்றன.
இந்தியாவில் சாம்பல் ஓநாய்கள் முக்கியமாக மனித குடியிருப்புகளை ஒட்டியுள்ள 'சவன்னா' என்னும் புல்வெளிக்காடுகளில் வாழ்கின்றன.
கென்யாவைப் போன்ற ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் சவன்னா (Savannah) என்று அழைக்கப்படும் புல்வெளிக்காடு உள்ளது. இதேபோன்ற புல்வெளிகள் இந்தியாவில் இமயமலையை ஒட்டிய தெராய் பகுதியிலும், ராஜஸ்தானிலும், மகாராஷ்டிரத்திலும் (புனே-சாஸ்வாத், அகமதுநகர், சோலாப்பூர்) காண முடியும்.
"இந்திய புல்வெளிக்காடுகள் (சவன்னா) ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கொண்ட பகுதி. பல விலங்குகள் அதில் வாழ்கின்றன . இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் ஓநாய்கள் உணவுச் சங்கிலியின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது" என்று மிஹிர் விளக்குகிறார்.
இந்தியாவில் இரண்டு வகையான ஓநாய்கள் உள்ளன. இமயமலை ஓநாய்கள் மற்றும் இந்திய ஓநாய் (Canis lupus pallipes) என்று அழைக்கப்படும் இந்திய சாம்பல் ஓநாய் ஆகியவை ஆகும்.
இந்திய ஓநாய் இனம் உலகின் முக்கியமான இனமாகும், ஏனெனில் இந்தியாவைச் சேர்ந்த இந்த சாம்பல் ஓநாய் இனம் உலகின் பழமையான சாம்பல் ஓநாய் இனங்களில் ஒன்று . அதாவது, ஒரு விதத்தில், அவை உலகின் சாம்பல் ஓநாய்களின் மூதாதையர்கள். அவை அழிந்துவிட்டால், பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கியமான சங்கிலி அறுந்துவிடும்.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) வகைப்பாட்டின் படி, சாம்பல் ஓநாய் அழிந்து வரும் உயிரினம் அல்ல. ஆனால் இந்தியா போன்ற சில நாடுகளில் இது ஆபத்துக்குள்ளாகிறது.
இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு சட்டத்தின் கீழ் ஓநாய்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் வாழ்விடங்களில் மனித தலையீடு அதிகரித்து வருவதால், அந்த விலங்குகள் ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஓநாய்களின் எண்ணிக்கை சுமார் 2,000 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்கள் உண்மையல்ல என்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணிக்கை மதிப்பீடுகளாக கூறப்படுவது. புலிகளுக்கு செய்வது போல் கண்க்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மகாராஷ்டிராவின் சவன்னா புல்வெளிகளில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே மாவட்டத்தில் மட்டும் 30 ஓநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புனேவின் மல்ரான்ஸில் ஓநாய்-நாய் கலப்பின விலங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆய்வில் வெளிவந்த தகவல்
நாய்கள் மற்றும் ஓநாய்கள் மரபணு ரீதியாக மிக நெருங்கிய உறவினர்கள்" என்கிறார் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் பல்லுயிர் ஆய்வாளர் அபி வனக். நாய்கள் ஓநாய்களிலிருந்து உருவானது - ஒரு விதத்தில் நாய்களை வளர்ப்பு ஓநாய் என்று கூட சொல்லலாம்"
அபி வனக் மேலும் கூறுகையில், “உலகம் முழுவதும் ஓநாய்-நாய் கலப்பினங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் சில புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. ஏனென்றால், ஒரு இடத்தில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தால், அவற்றால் புதிய துணையை கண்டுபிடிக்க முடியாது. அந்த நேரத்தில் அவை நாய்களுடன் கலப்பினம் செய்கின்றன. சமீப காலமாக, புல்வெளிக்காடுகளில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயம், கால்நடை மேய்ச்சல், குப்பை கொட்டுதல் போன்ற செயல்பாடுகளால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். நகரமயமாக்கல் விரிவாகும் போது, தெருநாய்களுக்கு காட்டு ஓநாய்களுடனான தொடர்பு அதிகரிக்கிறது." என்றார்.
கடந்த காலங்களில், நாய்களின் சில இனங்களை உருவாக்க நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையில் மனித கலப்பின வழக்குகள் உள்ளன, மேலும் இதுபோன்ற இனப்பெருக்கம் பல இடங்களில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது .
"ஆனால் காடுகளில் இத்தகைய கலப்பினம் உருவாவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது ஓநாய் இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அவற்றின் தனித்துவமான மரபணு அடையாளம் அழிந்துவிடும்."
இது குறித்து மூலக்கூறு சூழலியல் நிபுணர் உமா ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் (NCBS) பேராசிரியராக உள்ளார். உமாவின் சொந்த ஆய்வகம் ஓநாய்-நாய் கலப்பின விலங்கின் மரபணு வரிசைமுறையைச் செய்து, இந்தியாவில் அத்தகைய கலப்பின விலங்கு இருப்பதை நிரூபித்தது.
உமா கூறுகையில், “நீங்கள் இரண்டு வண்ணங்களை எடுத்து அவற்றை ஒன்றாக கலந்தீர்களானால் இறுதியில் கிடைக்கும் வண்ணங்கள் முதலில் இருந்ததைப் போலவே இருக்காது. இதேபோல் கலப்பினமானது ஒரு இனத்தின் மரபணு பண்புகளை நீர்த்துப்போகச் செய்கிறது.”
"இங்கு நாய்களைப் போல ஓர் இனத்தில் அதிக விலங்குகள் இருக்கும் உயிரினம் ஓநாய்கள் போல குறைவாக இருக்கும் இனத்துடன் கலப்பினம் செய்யும் போது, நாய்கள் ஓநாய்களின் மரபணு பண்புகளை அழித்து, இறுதியில் ஓநாய் இனத்தையே அழித்துவிடும்." என்கிறார்.
அபி வனக் விவரிக்கையில், “நாய்க்கும் ஓநாய்க்கும் மரபணு வேறுபாடு உள்ளது. மனிதர்களால் வளர்க்கப்படுவதால், நாய்கள் ஓநாய் போன்ற குணங்களை இழந்துவிட்டன. அதாவது, அவை அளவு சிறியதாகி, அவற்றின் வலிமை குறைந்துவிட்டது. கலப்பினம் ஏற்பட்டால், நாய்களின் குணங்கள் ஓநாய்களுக்குள் செல்லலாம், இது ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்."
ஆனால் அத்தகைய கலப்பினம் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியாது.
மிஹிர் காட்போல் கூறுகையில், “நாய்கள் ஓநாய்களுக்கு ரேபிஸ் போன்ற நோய்களையும் வைரஸ்களையும் கடத்தும். இந்த வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை, இதுபோன்ற தொற்று அந்த பகுதியில் உள்ள அனைத்து காட்டு ஓநாய்களையும் கொல்லக்கூடும். ஓநாய்கள் உணவாக சாப்பிடும் சிறிய விலங்குகளைத் தெருநாய்கள் கொல்கின்றன.
நிச்சயமாக, ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்துவது நாய்கள் மட்டுமல்ல. `கிராஸ் லேண்ட் அறக்கட்டளையில் மிஹிரின் குழு நடத்திய மற்றொரு ஆய்வில், ஓநாய் வாழ்விடங்களில் சிறுத்தைகள் இருப்பதும் அந்த வாழ்விடங்களின் சமநிலையை சீர்குலைப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் இன்னும் இந்திய ஓநாய்களைப் பாதுகாக்க போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஓநாய்கள் மற்றும் மான்களின் பாதுகாப்பு
அபி வனக் கூறுகையில், “புலிகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் அதே வழியில், ஓநாய்களைப் பாதுகாக்க நினைத்தால் அது நடக்காது. ஓநாய்களுக்கு தனியாக பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களை உருவாக்க முடியாது. ஏனெனில் அவை கலவையான நிலப்பகுதியில் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.
`கிராஸ் லேண்ட் அறக்கட்டளை தற்போது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது கிராமவாசிகள் மற்றும் அனைத்து பிரமுகர்களையும் உள்ளடக்கியது. இந்த புல்வெளிக்காட்டின் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக இது செயல்படுகிறது.
மாநிலத்தில் ஓநாய் பாதுகாப்புக்காக வனத்துறைக்கு ஒரு திட்டத்தை அவர்கள் முன்மொழிந்துள்ளனர். ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாக உமா ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று இந்த கலப்பின விலங்கை எவ்வாறு வகைப்படுத்துவது? வனவிலங்கு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா? அத்தகைய விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை என்ன செய்வது? இவை நெறிமுறைகள் மட்டுமல்ல, சூழலியல் மற்றும் உயிரியல் பற்றிய கேள்வியும் கூட.
"பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால் எதிர்காலத்திலும் பரிணாமம் நிகழும். உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் திசையை மனிதர்களாகிய நாம் தீர்மானிக்கப் போகிறோமா?"