சூலூர் சுப்பாராவ் கொலை வழக்கு: பெண்ணாசை கொண்ட ஜமீன்தாரை விடாது துரத்திய கொலை

ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (14:55 IST)
சூலூர் ஜமீன்தாராக இருந்த சுப்பாராவ் ஒரு கொலையைச் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் அந்த வழக்கில் இருந்து தப்பி விடுகிறார். ஆனால், அந்தக் கொலை அவரை விடவில்லை.



ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு கொலைகள். முதல் சம்பவத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றதாக ஜமீன்தார் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது கோயம்புத்தூர் புகைப்படக் கலைஞர் கொலை வழக்கு என மாகாணம் முழுவதும் பேசப்படுகிறது.

ஆனால், அவரை நீதிமன்றம் விடுவித்த சில நாட்களுக்குள், அந்த ஜமீன்தார் சிலரால் கொல்லப்படுகிறார். அவரது பெயர் சுப்பாராவ். சூலூரின் ஜமீனாக இருந்தவர். சூலூர் சுப்பாராவ் கொலை வழக்கு எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் விவகாரம், இந்த இரண்டு கொலைகளையும் பற்றியதுதான்.

அன்று 1920ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி. அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் கிராமப்புறம் ஒன்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் மிகக் கோரமான சடலம் ஒன்றைப் பார்த்தான். அந்த சடலத்திற்குத் தலை இல்லை. காவல்துறை வந்து சடலத்தைக் கைப்பற்றியபோது வெறும் எலும்புக்கூடுதான் இருந்தது.

தலையில்லா சடலமாக கிடந்தவர் யார்?

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் செபாஸ்டியன் என்பவர் தனது தந்தையும் புகைப்படக் கலைஞருமான குருசாமிப் பிள்ளை என்பவரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். அவரை அழைத்து சடலத்தில் இருந்த ஆடைகளைக் காட்டினார்கள். அவர், அது தனது தந்தையுடையது என்பதை உறுதிப்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் இருந்த சூலூரின் ஜமீன்தாராக ஏகப்பட்ட நிலபுலன்களுடன் இருந்தவர் சுப்பா ராவ். அந்தக் குடும்பத்திற்கு ஊர் மக்களிடையே நல்ல பெயரும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் கெடுப்பதற்காகவே வந்தவரைப் போல இருந்தார் சுப்பாராவ்.

பெண்கள் தொடர்பான அவரது அணுகுமுறை மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில்தான், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜே.சி. குருசாமிப் பிள்ளை என்பவரது மகள் மீது சுப்பாராவின் பார்வை பட்டது. அந்தப் பெண்ணிடம் பல வகையிலும் முயன்றார் சுப்பா ராவ். ஆனால், இந்த முயற்சிகளுக்கு தந்தை குருசாமிப் பிள்ளை தடையாக இருந்தார்.

ஜனவரி 13ஆம் தேதி குருசாமிப் பிள்ளையின் வீட்டிற்கு வந்த இரண்டு பேர், அருகிலுள்ள கிராமத்தில் ஒரு புகைப்படம் எடுக்கும் வேலை இருப்பதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்றனர். அப்படிச் சென்றவர்தான் தலையில்லாத சடலமாகக் கிடைத்தார்.

காவல்துறை சீக்கிரமே குருசாமிப் பிள்ளையை அழைத்துச் சென்ற முகமது கவுஸ், பொன்னுசாமி ஆகிய இருவரையும் கைது செய்தது. இவர்கள் இருவரும் சுப்பாராவின் பணியாளர்கள்.

அவர்கள் அளித்த தகவலில் நஞ்சப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் சுப்பாராவின் நண்பர். பிறகு, இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டார். இறுதியில் சுப்பாராவும் கைதானார். ஆக, மொத்தமாக ஐந்து பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

சுப்பாராவ் உள்ளிட்டோருக்கு 4 தூக்கு தண்டனை

காவல்துறையின் கூற்றுப்படி, ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட குருசாமிப் பிள்ளையை, முகமது கவுஸும் பொன்னுசாமியும் காரில் ஏற்றிக் கடத்தினார்கள். காரை ஓட்டியது சுப்பாராவ். பிறகு அவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரை கடத்த பயன்படுத்தப்பட்ட கார், வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கோயம்புத்தூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இ.ஆர். ஆஸ்பர்ன் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரானார். பிற்காலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞரான இ.எல். எத்திராஜும் இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு உதவினார்.

சுப்பா ராவுக்காகவும் அவரது நண்பர்களுக்காகவும் சி.வி. வெங்கடரமண அய்யங்கார், ஆர். சடகோபாச்சாரியார் ஆகியோர் ஆஜராகினர். சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரான எர்ட்லி நார்டனும் ஆலோசனைகளை வழங்கினார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, மாநிலம் முழுவதும் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த வழக்கில் அஸ்ஸர்களாக (ஜூரிகளாக) இருந்தவர்கள், சுப்பாராவ் குற்றவாளி இல்லை என முடிவு செய்தனர். இருந்தாலும் வழக்கை விசாரித்த நீதிபதியான ஜே.ஜே. காட்டன், சுப்பாராவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வேறு மூவரும் குற்றவாளிகள் எனக் கருதினார். ஆகவே, அப்ரூவராக மாறிய நபரைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டுமென்பதால் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்ட நிலையில், ஆர். சடகோபாச்சாரியார் குற்றவாளிகளுக்காக ஆஜரானார். எர்ட்லி நார்ட்டன் வழிகாட்டுதல்களை வழங்கினார். நஞ்சப்பருக்காக வேறொரு வழக்கறிஞர் ஆஜரானார்.

சுப்பாராவை கொன்றது யார்?

உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணை, கீழமை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைவிட சுவாரஸ்யமானதாக அமைந்தது. எர்ட்லி நார்டன், கொலையின் அடிப்படை குறித்தே கேள்வியெழுப்பினார்.

குருசாமிப் பிள்ளையின் மகளை சுப்பாராவ் குறிவைத்திருந்தால், அந்தப் பெண்ணையல்லவா கடத்தியிருக்க வேண்டும், ஏன் குருசாமிப் பிள்ளையை கடத்தப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சடலத்தின் தலை கிடைக்கவில்லை என்பதால், கிடைத்த சடலம் குருசாமிப் பிள்ளையுடையதா என்பதிலும் சந்தேகம் இருப்பதாகக் கூறினார். குருசாமிப் பிள்ளையின் உடைகளை, கிடைத்த எலும்புக்கூட்டிற்கு மாட்டி விட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டிருப்பதாகவும் வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எய்லிங் மற்றும் ஜேஜே ஹ்யூக்ஸ், நார்ட்டனின் வாதங்களை ஏற்றுக்கொண்டனர். காவல்துறைக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்து, குற்றவாளிகளை விடுவித்தனர்.

சுப்பாராவும் அவரது கூட்டாளிகளும் விடுதலையாகி வெளியில் வந்தனர். சுப்பாராவின் நடவடிக்கைகள் அதற்குப் பிறகும் மாறவில்லை. ஆண்டுகள் கழிந்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி சேலத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்த கண்ணம்பாளையத்தில் உள்ள சுப்பாராவின் தோட்டத்தில் அவரும் அவருடைய வேலைக்காரர்கள் இருவரும் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அவரை யார் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை ஜே.சி. குருசாமிப் பிள்ளையை கொன்றது சுப்பாராவும் அவருடைய ஆட்களும்தான் என மக்கள் நம்பினார்கள்.

ஆகவே, சுப்பாராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பதோடு, அவரது குற்றத்திற்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதாக உணர்வும் மக்களிடையே ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்