சிறையிலிருந்து ஜாமீன் பெற்று விடுதலையாகி வந்த தினகரனுக்கு குவியும் அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுகளை பார்த்து ஓபிஎஸ் அணி கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணி, சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கினால் மட்டுமே இரு அணி இணைவதற்கான பேச்சு வார்த்தையில் பங்கு பெறுவோம் என தடாலடி காட்ட, தினகரனை விலக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நான் கட்சிப்பணியிலிருந்து ஒதுங்கி விட்டேன் என தினகரனும் அறிவித்தார். அதன் பின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவர் டெல்லி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், சசிகலா மற்றும் தினகரனிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, அதை எடப்பாடி அணி ஏற்றுக்கொள்ளாததால், பேச்சுவார்த்தை நடைபெறமால் இருக்கிறது.
இந்நிலையில்தான் தினகரன் வெளியே வந்துள்ளார். மேலும், இரண்டு அணிகளும் இணைவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என்றார்கள். எனவே ஒதுங்கியிருந்தேன். ஆனால், இதுவரை இரண்டு அணிகளும் ஒன்றிணையவில்லை. எனவே, நான் மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என அதிரடி காட்டினார்.
தற்போது வரை 32அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்கள் தினகரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். சில மாவட்ட செயலாளர்களும் அவர் பக்கம் வந்துள்ளனர். இதில் பல எம்.எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவி கனவில் இருப்பவர்கள் எனத் தெரிகிறது. எடப்பாடி அரசு தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வராததாலும், தற்போது உள்ள அமைச்சர்களிடையே அவர்களுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாகவே அவர்கள் தினகரன் பக்கம் வந்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எனவே, அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இதில், முக்கிய விவகாரம் என்னவெனில், சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனுக்கு இருக்கும் ஆதரவு கூட, சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவிற்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ என போர்கோடி உயர்த்திய ஓ.பி.எஸ் அணிக்கு கிடைக்கவில்லை. ஓபிஎஸ் பக்கம் தற்போது வரை வெறும் 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றுள்ளனர். ஆனால, தினகரன் பக்கமோ 32 பேர் சென்றுள்ளனர். இந்த விவகாரம் ஓபிஎஸ் அணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது கருத்து தெரிவித்த அவரின் ஆதரவாளர்கள் “ நாம் சசிகலா குடும்பத்தை எதிர்த்த போது,மக்களிடம் நமக்கு செல்வாக்கு அதிகரித்தது. ஊடகங்களும் நம்மை ஆதரித்தன. ஆனால், அந்த செல்வாக்கு குறைந்து போய் விட்டது. நம் பக்கம் வெறும் 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். தினகரன் சிறைக்கு சென்ற பின்பும் நம் பக்கம் எந்த எம்.எல்.ஏக்களும் வரவில்லை. ஆனால், அவர் வெளியே வந்தவுடன் அவர் பக்கம் 32 எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளனர். மேலும், நம் அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களும் அவரை சந்திக்க முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே, உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஓ.பி.எஸ் “பொறுமையாக இருங்கள்.. செய்ய வேண்டியைதை செய்வோம்” என்று மட்டும் கூறினாராம்.