’இன்னோவா’வை ஒப்படைத்த நாஞ்சில் சம்பத் - திமுக இணைவின் முன்னோட்டமா?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:08 IST)
ம‌திமுக கொ‌ள்ளை பர‌ப்பு செயலாளராகவும் இருந்த நா‌‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் ஐக்கியமானார்.


 

பின்னர், அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிமுக சார்பாக ‘இன்னோவா’ கார் வழங்கப்பட்டதை அடுத்து, இன்னோவா சம்பத் என்று விமர்சிக்கப்பட்டார்.

பிறகு நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாஞ்சில் சம்பத், அதிமுகவில் வகித்து வந்த கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து ஜனவரி 2ஆம் தேதி திடீரென்று நீக்கப்பட்டார்.

கடந்த 6ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மறைவை அடுத்து, ஜெயலலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்ககவே நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தன. ஆனால், அவரது மகள் மதிவதனி இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

இதனிடையே தற்போது நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாகவும் இது குறித்து நெருங்கிய ஆதரவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இது தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள சம்பத், ”கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி கட்சி பிரச்சாரத்துக்காக அதிமுக பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார், என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்.

அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.

இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்றார்.

ஏற்கனவே திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வந்த நிலையில், இன்று தனக்கு வழங்கப்பட்ட காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்