இஸ்லாமும் தீவிரவாதமும்: இலங்கையில் நடைபெற்ற கோர சம்பவம்...

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (11:49 IST)
உள்ளத்தையும், உலகத்தையும் உலுக்கிய வரிசையாகக் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் ! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்.
 
தீவிரவாதத்தை யார் செய்தாலும் அவர்களை இஸ்லாத்தைச் சொல்லி அடையாளப் படுத்தாதீர்கள் ! ஏனென்றால் இஸ்லாம்  தீவிரவாதத்தை நியாயப்படுத்தவில்லை. இஸ்லாம் அன்பின் மதம். உலகின் பிற சமூகத்தால் தவறாக புரிந்துக்கொள்ளப் பட்ட சரியான மார்க்கம் இஸ்லாம். உலகின் எந்த மூலையில் குண்டு வெடிப்புக்கள் நடந்தாலும், முதல் சந்தேகப்  பார்வைப்  படரும்  ஒரு சமூகம் இஸ்லாம்.  இந்த பயங்கரவாதத்தை இஸ்லாமியர்கள்  மீதோ, இஸ்லாத்தின்  மீதோ திணிக்க வேண்டாம். நியூஸி பள்ளிவாசலில் வைத்து துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தில் முஸ்லீம்களின் பொறுமை அனைவரையும் கவர்ந்தது.
 
இலங்கை அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பதற்கு முன்பே மருத்துவமனைகளை நோக்கி ஓடினார்களே இஸ்லாமியர்கள். அவர்களின் அந்த  மார்க்கமே இஸ்லாம். 
 
நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாக மற்றொவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் ஆவான்  - திருக்குர்ஆன் 5 : 32.
 
ஒரு சமூகம் தனக்கு/தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி மன்றங்களையே  நாட வேண்டும். நெடிய நீண்ட சட்டப்  போராட்டங்களுக்கு தங்களை தயார் செய்துக் கொள்ள வேண்டும். இறைவன் நீதியின் பக்கமே இருக்கிறான்.  அதற்கான உதாரணம் குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதி, அவரின் நீண்ட சட்டப்  போராட்டங்கள், அதன் வெற்றி. 
 
நீதியின் பாலும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் சிலரால் சிலர்க்கு, இளம் மூளைகளுக்கு, மூளை சலவைச் செய்யப்பட்டு  ISIS போன்ற இயங்கங்களுக்கு விலை போகிறார்கள். தவறான வழி நடத்தப் படுகிறார்கள். அதற்கான உதாரணம் தான் இந்த குண்டு வெடிப்புக்கள். உண்மையில் இஸ்லாம் மிக லேசான மார்க்கம். மிக மிருதுவான மார்க்கம். இந்த குண்டு வெடிப்புக்கள் மூலம் இஸ்லாம் ஒரு உணர்வு பூர்வமான, ஒரு துன்பவியல் மார்க்கம் என காட்ட சிலர் முயற்சித்து இருக்கிறார்கள்
 
உண்மையில் ஜிகாத், புனிதப்போர் பற்றிய இளையர்களின்  தவறானப் புரிதல் காரணமாகவே ஐ எஸ்  ஐ எஸ் போன்ற இயக்கங்கள் வலுப் பெற்று இஸ்லாத்திற்கும், இஸ்லாமிய சமூகத்திற்கும் மாபெரும் தலைக் குனிவை ஏற்படுத்த முயல்கின்றது. 
 
காயத்தை குருதியைக் கொண்டு கழுவாதே !
என்றார் மௌலானா ரூமி (ரஹ்).
 
கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.
திருக்குர்ஆன் 11:18
 
இறந்துப் போன அந்த பச்சிளம் குழந்தை முகம் நம் மனதை விட்டு என்றும் அகலாது. அந்த குழந்தைக்கு அவள் பெற்றோர் மட்டும் தான் அழ வேண்டுமா ? ஏன்  அந்த குழந்தை நம் அனைவருக்குமான  குழந்தை ஆவாள். இலங்கையின் குண்டுவெடிப்பில் மாண்ட ஒவ்வொரு உறவுகளின் ஆத்மா சாந்தி அடையட்டும்.





R.Kaja Bantha Navas
sumai244@gmail.com

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்