இந்திய பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும், அது மட்டுமின்றி என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், சந்திப்புக்கு பின் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர். மிகவும் சிறப்பாக அவர் செயல்படுகிறார். அமெரிக்கா-இந்தியா நட்பு எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று தெரிவித்தார்.
மேலும், "இரு நாட்டு வர்த்தகங்கள் தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். பல விஷயங்கள் முடிவு செய்யப்படும். இந்தியாவுக்கான மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்யும். எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா அதிக அளவில் எங்களிடமிருந்து கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்," என்றும் டிரம்ப் தெரிவித்தார்.