அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

Mahendran

சனி, 15 பிப்ரவரி 2025 (15:02 IST)
தமிழக முதல்வருக்கு தான் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எங்களுக்கு டப்பிங் தேவையில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
 
"பாஜகவின் டப்பிங் குரலாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோ மூலம் கூறிய நிலையில், அதற்கு பதிலடி அளித்துள்ள அண்ணாமலை, "முதல்வருக்குத்தான் டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாக அறிவாலயத்தில் இருந்த சிலர் ‘அடித்து விடுவேன், மிதித்து விடுவேன்’ என்று மிரட்டுகிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
"டப்பிங், கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முதல்வரின் பையனுக்கு தேவைப்படும். உதயநிதிக்கு டப்பிங் பண்ண சந்தானம்,  தேவைப்படுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு டப்பிங் பண்ண, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
"திமுக அமைச்சரவையில் உள்ள 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள்தான். அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு அது தேவையில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளே இந்து அறநிலைத்துறையை ஆய்வு செய்வோம் என்று கூறிய அண்ணாமலை, "தைரியம் இருந்தால் இந்து அறநிலைத்துறை ஆவணங்களை CAG-க்கு கொடுத்து ஆய்வு செய்யுங்கள்" என்றும் சவால் விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்