சென்னையில் நடைபெறும் பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் கலந்து கொள்வதற்காக மாதா அமிர்தானந்தமயி பிப்ரவரி 17, 18, ஆகிய தேதிகளில் சென்னை வர இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35வது பிரம்மஸ்தான ஆண்டு விழா பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகிறார் என்றும், அவருடைய வழிகாட்டுதலின்படி பூஜைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
உலக அமைதிக்கான பிரார்த்தனைகள் இந்த பூஜைகளின் ஒரு பகுதியாக நடைபெறும் என்றும், பக்தர்கள் அவரை நேரில் தரிசிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை முடித்தவுடன் கரூர் செல்லும் மாதா அமிர்தானந்தமயி, அங்குள்ள பள்ளி ஒன்றில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கோவையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.