அணுகுண்டுகள் தயாரிப்பில் பாகிஸ்தான், சீனா முதலிடம்:திடுக்கிடும் தகவல்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (18:42 IST)
உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் அணுகுண்டுகள் தயாரிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. உலகளாவிய அளவில் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டிற்கான கையேடு இன்று வெளியிடப்பட்டது. அந்த கையேட்டின் விவரங்களின் படி, சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்ட வகையில் இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்த 130-140 என்ற அதே வகையில் தான் தற்போதும் உள்ளது.

ஆனால் பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகள் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதே வேளையில், கடந்த ஆண்டு 280 அணுகுண்டுகளை வைத்திருந்த சீனா, இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளையும், 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தான் 160 அணுகுண்டுகளையும் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 80 அணுகுண்டுகளை வைத்திருந்த இஸ்ரேல், இந்த ஆண்டு 90 அணுகுண்டுகளையும், 10-20 அணுகுண்டுகள் வைத்திருந்த வடகொரியா தற்போது 30 அணுகுண்டுகளையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள கையேட்டில் இவ்வாறு கூறப்பட்டிருப்பது, போர் பற்றிய அச்சம் உலக நாடுகளில் பெருகிவருவதற்கான அறிகுறிகளாக பல அரசியல் வல்லுனர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்