ஒமிக்ரான் எதிரொலி: நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு!

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (11:34 IST)
நெதர்லாந்து நாட்டில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜனவரி 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகையை விட ஒமிக்ரான் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
எனவே, நெதர்லாந்து நாட்டில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜனவரி 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும். பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9 ஆம் தேதி வரை மூடப்படும். 
 
குறிப்பாக ஊரடங்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாரிகள் விதிவிலக்கு அளித்திருந்தாலும், வீடுகளில் அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையில் கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்