பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளம் என்ற நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று வரையில் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்த நிலையில், முதல் தளத்துக்கும் இரண்டாவது தளத்துக்கும் இடையே உள்ள லிப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக ஈபிள் டவரில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
மேலும், தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு ஈபிள் டவரை பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவரை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் ஈபிள் டவரை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.