நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டு பாலங்கள் உடைந்ததுடன், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை தொடங்கியது. தொடர்ந்து பகலிலும் இரவிலும் மழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருவிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கால் தென்காசி மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் உடைந்தன. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவிலை தாண்டி கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.