சூப்பர் டீலக்ஸ் கதை என்னுடையது! –பிரபல எழுத்தாளர் புகார்…

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (08:07 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் ஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படமான சூப்பர் டீலக்ஸின் ஒருப் பகுதிக் கதை தன்னுடைய சிறுகதை என்று எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை எடுத்துள்ளது ஒரேப் படம்தான் என்றாலும், கோலிவுட்டில் உள்ள இயக்குனர்களே வியந்து பார்க்கும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவர் இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து தற்போது அவரது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் வெளியாக உள்ளது.

இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஐவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதலில் ஆந்தாலஜி படம் என அறியப்பட்ட சூப்பர் டீலக்ஸ் தற்போது ஐந்து கிளைக்கதைகளைக் கொண்ட ஒரே திரைப்படம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள பகுதியின் கதை தன்னுடைய சிறுகதையான நீலத்திரையை முழுவதுமாக ஒத்துள்ளதாக யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து முகநூலில் எழுதியுள்ள அவர் ‘விடுதியில் தங்கிப் படிக்கும் வளரிளம்பருவ மாணவன் ஒருவன் ஆபாசப் படங்களைப் பார்க்கும் போது எதிர்பாராத விதமாக தன்னுடைய தாயின் ஆபாச படத்தைக் காண நேரிடுகிறது. அதற்கு அவன் ஆற்றும் எதிர்வினை என்ன என்பதே என்னுடைய சிறுகதை. சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நெருக்கமான நண்பர்கள் இதே கதைதான் சூப்பர் டீலக்ஸில் உள்ள ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் பகுதியின் கதையும் எனத் தெரிவித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா என்னுடைய சிறுகதையைப் படித்துள்ளாரா அல்லது இருவருமே ஒரே மாதிரி யோசித்திருக்கிறோமா என எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தியாகராஜன் குமாரராஜாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்