அள்ளிக்குடுத்த வள்ளல்! இப்படிப்பட்டவரா மயில்சாமி? – பிரபலங்கள் பகிர்ந்த நினைவுகள்!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (09:22 IST)
பிரபல தமிழ் காமெடி நடிகரான மயில்சாமி திடீர் மரணமடைந்த நிலையில் அவர் குறித்து திரை பிரபலங்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் மயில்சாமி. 1984ல் பாக்யராஜின் ‘தாவணி கனவுகள்’ படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நுழைந்தவர் தொடர்ந்து சின்ன சின்ன ரோல்களில் நடிக்க தொடங்கி முக்கியமான காமெடி நடிகராக மாறினார்.,

வெறும் நடிகராக மட்டுமல்லாமல், மேடை நடிகர், மிமிக்ரி கலை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல விதமான கலை பங்களிப்புகளை செய்தவர் மயில்சாமி. இன்று காலை 3.30 மணியளவில் மயில்சாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இது திரையுலகினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் மயில்சாமியின் தாராள குணம் குறித்த தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மயில்சாமி குறித்து பேசிய இயக்குனரும், நடிகருமான மனோபாலா “சென்னையில் மழை, புயல் வந்துவிட்டால் உடனே படகு எடுத்துக் கொண்டு உதவி செய்ய புறப்பட்டு விடுவார். பணம் அதிகம் செலவாகிறதே என கேட்டால் “என்ன கொண்டு வந்தோம்.. என்ன கொண்டு போகப்போறோம்” என்பார். திரைத்துறையினர் தொடர்ந்து இறந்து வருவது வருத்தமளிக்கிறது” என கூறியுள்ளார்.



”திரைத்துறையில் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மயில்சாமி அண்ணனை தெரியும். நிறைய பேருக்கு அண்ணன் உதவி செய்திருக்கார். இது மிகப்பெரிய இழப்பு” என யோகிபாபு தெரிவித்துள்ளார்.

”திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கும் இது பெரும் இழப்பு. தீவிரமான எம்ஜிஆர் பக்தர். வெள்ளை மனசுக்காரர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் “கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி. விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகள் செய்துள்ளார். சமூக அக்கறையுடன் கருத்துகளை தனது நகைச்சுவை மூலம் மக்களிடம் கொண்டு சென்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்