என்னையும் சக மனுஷியாக மதித்தனர்- ‘அருவி’ திருநங்கை அஞ்சலி!!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (21:14 IST)
‘என்னை சக மனுஷியாக மதித்தது பெருமையாக இருந்தது’ என ‘அருவி’ படத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
 
“நானும், இன்னொரு திருநங்கையும் ஆடிஷனுக்கு சென்றிருந்தோம். இருவரையும் நடித்துக் காட்ட சொன்னார்கள், நடித்து காட்டினோம். ஒரு மாதம் கழித்து, ‘நீங்கள்தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள்’ என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமாக என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். 
 
படப்பிடிப்பு தளத்தில் நான் திருநங்கை என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவரும் நட்பாகப் பழகினார்கள். சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை. அதை ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி பண்ணுங்கள் என்று இயக்குநர்  தட்டி கொடுத்தார். கேரளா போன்ற வெளியிடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் கதாநாயகி என்னை சக மனுஷியாக நினைத்து, என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். 
 
இந்த படத்தில் நான் எமிலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றேன். இயக்குநர் என் கதாப்பாத்திரம் பற்றி கூறும்போது வித்தியாசமாகத்தான் இருந்தது. எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எப்படி தேர்வாகினேன் என்று தெரியவில்லை. இந்த கதாப்பாத்திரம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். திருநங்கை என்ற பாகுபாடு இல்லாமல், படம் முழுவதும் வருவது போல் காட்சி உள்ளது. 
 
ஒரு பெண்ணோடு என்னையும் சேர்த்து ஒரு கதாப்பாத்திரமாக தான் கொண்டு வந்தார்கள். ஒரு திருநங்கையும், ஒரு பெண்ணும் எப்படி நட்பு ரீதியாக பழகிக் கொள்கிறார்கள், தன்னுடைய சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற விஷயம் இருக்கும். பொதுவாக, திருநங்கைகள் பற்றி பல திரைப்படங்களில் கேலி கதாபாத்திரமாக வைத்திருப்பார்கள் இந்தப் படத்தில், படம் முழுவதும் வருவது போல் இருக்கிறது இதற்கு முன்பு எந்த திருநங்கையும் படம் முழுவதும் வந்தது இல்லை” என்கிறார் அஞ்சலி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்