ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (13:34 IST)
மறைந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள்.

 
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்த முத்துக்குமார் இயக்குனர் ஆகத்தான் முதலில் ஆசைப்பட்டார். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முத்துக்குமாருக்கு கதையை விட கவிதையும், பாடலுமே கைவசப்பட்டது. எனவே, சினிமாவிற்கு பாட்டெழுதும் வேலையை அவர் தேர்ந்தெடுத்தார்.
 
வீரநடை படத்தில்தான் பாடல் எழுதியதுதான் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு. அதன் பின் தொடர்ச்சியாக அவர் பல பாடல்கள் எழுதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு பாடலாசிரியராக மாறிப்போனார்.
 
இயக்குனர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இவர் எழுதிய பாடல்கள் வைரல் ஹிட். காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற ‘தேவதையை கண்டேன்..காதலில் விழுந்தேன்’ என்ற பாடல் ஒருதலை காதலின் ஏக்கத்தை உணர்த்தியது. அதேபோல், 12ஜி ரெயின்போ காலணி படத்தில் இடம் பெற்ற ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ இப்போதும் காதல் கை கூடாமல் போனவர்களின் வலியை பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.

 
இயக்குனர் ராமின் கூட்டணியில் தமிழ் எம்.ஏ படத்தில் முத்துக்குமார் எழுதிய ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ இப்போதும் காதலின் வலியை காற்றில் பேசிக்கொண்டே இருக்கிறது.  தங்க மீன்கள் படத்தில் அவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல், ஒரு தந்தைக்கும், மகளுக்குமான அன்பை எடுத்துரைக்கிறது.
 
தங்க மீன்கள் மற்றும் சைவம் ஆகிய இரண்டு படத்திற்காகவும் நா. முத்துக்குமார் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இப்படி பல பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்த நா.முத்துகுமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 41.
 
அவரின் பிறந்த நாளான இன்று அவரை பற்றிய பல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. 
 
உண்மைதான்.. கவிஞன் மறைந்தாலும் அவனின் கவிதையும், பாடல்களும் காற்றினில் எப்போதும் உயிர்ப்போடுதான் இருக்கிறது...
 
இந்த நாளில் நா.முத்துக்குமாரை நினைவு கூர்வோம்....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்