தமிழ்ப்படம் 2: திரைவிமர்சனம்

வியாழன், 12 ஜூலை 2018 (11:57 IST)
சிவா நடிப்பில் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் 'தமிழ்ப்படம் 2' திரைப்படத்தின் திரை விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
இந்த படத்தின் கதை என்னவென்று இயக்குனர் உள்பட படக்குழுவினர்களோ, அல்லது படத்தை பார்த்தவர்களோ கூறினால் அவர்களுக்கு ஆஸ்கார் உள்பட பெரிய விருதுகளை அளித்து கெளரவப்படுத்தலாம்
 
முழுக்க முழுக்க சிவா ஒருவரை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல் தெரிகிறது. அந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றவும் இல்லை. ஒரே ஒரு இட்லியை வைத்து ஒரு பெரிய கலவரத்தை அடக்குவது முதல் வில்லன் சதீஷை பிடிப்பது வரை அவரது நடிப்பு, பாடி லாங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் திரையுலகினர்களை கொஞ்சம் அதிகமாகவே கலாய்த்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் உள்பட எந்த பெரிய நடிகரையும் விட்டுவைக்கவில்லை. 
 
திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகிய இருவரும் இந்த படத்தின் நாயகிகள் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு உணர்வே வரவில்லை
 
இதுவரை மொக்கை காமெடி செய்து வந்த சதீஷ் தற்போது மொக்கை வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். 2.0 அக்சயகுமார் கெட்டப் முதல் பல்வேறு கெட்டப்புகள் மட்டும் இவரது பிளஸ்.
 
இயக்குனர் சி.எஸ். அமுதன், தமிழில் வெளிவந்த அனைத்து படங்களையும் பார்த்திருப்பார் போல தெரிகிறது. ஒவ்வொரு படத்தில் இருக்கும் மெயின் காட்சிகளை கலாய்ப்பதற்கு அதிகமாக யோசித்துள்ளார். அதேபோல் ரிசார்ட், சமாதியில் சவால், தியானம், தர்மயுத்தம் ஆகிய அரசியல் நிகழ்வுகளும் அமுதனின் பார்வையில் தப்பவில்லை. இருப்பினும் ஒரு படத்தில் இரண்டரை மணி நேரமும் கலாயத்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது. கொஞ்சம் கதையையும் சேர்த்து கலாய்ப்பை மிக்ஸ் செய்திருக்கலாம். 

மொத்தத்தில் தமிழ் சினிமாவை ஒன்றுவிடாமல் பார்த்தவர்களுக்கு இதுவொரு ஜாலியான படம், மற்றவர்களுக்கு ஒரு சுமார் படம்
 
ரேட்டிங்: 2/5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்