மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாவலைப் படமாக்கும் தனது கனவுத்திட்டத்தை இப்போது கையில் எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். சமீபத்தில் மேலும் 2 நாயகிகளாக அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோரும் இணைந்தனர். இதையடுத்து இப்போது நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தில் இணைந்துள்ளார். அதனால் அவரது கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். பெருவாரியான ரசிகர்கள் பார்த்திபன் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்துக்காகதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என ஆருடம் கூறி வருகின்றனர்.
லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் இயக்குனர் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.