நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் நடிகர்களுக்கு தூக்கம் வராது… மிஷ்கின்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:27 IST)
இயக்குனர் மிஷ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே துப்பறிவாளன் 2 படத்தினால் பிரச்சனை ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து இப்போது மிஷ்கின் விலகியுள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது எனிமி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் விஷால் துப்பறிவாளன் 2 ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார். மேலும் ’துப்பறிவாளன் 2 படத்தை அநாதையாக விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை நான் தத்து எடுத்துக்கொண்டேன். அந்த படத்துக்காக மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. அது என் தவறுதான். இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள இயக்குனர் மிஷ்கின் ‘திரைத்துறையினர் அனைவரும் என் குடும்பம்தான். விஷால் உட்பட. அவரும் என்னைத் திட்டினார். நானும் அவரைத் திட்டினேன். அதோடு முடிந்துவிட்டது. நடிகர்களுக்கு அவர்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் தூக்கம் வராது. நாங்கள் இயக்குனர்கள் கெட்டவர்கள்தான். இனிமேல் நான் விஷால் பற்றி பேசமாட்டேன். அவரும் என்னைப் பற்றி பேசமாட்டார் என நினைக்கிறேன். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்