சூர்யா கட் அவுட் நீக்கப்பட்டது ஏன்? அரசியல் காரணமா?

Webdunia
வியாழன், 30 மே 2019 (14:23 IST)
என்.ஜி.கே திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருப்பதால் அதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் 7 லட்ச ரூபாய் செலவு செய்து 215அடிக்கு பிரம்மாண்டமான கட் அவுட் ஒன்றை நேற்று வைத்தார்கள். எந்த வித அனுமதியும் பெறாமல் கட் அவுட் வைக்கப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அதை அங்கிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் கட் அவுட் அங்கிருந்து நீக்கப்பட்டது.

சூர்யாவின் கட் அவுட் நீக்கப்பட்டதற்கு அனுமதி பெறாததுதான் காரணமா? அல்லது அரசியல் காரணமா? என ரசிகர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் இந்த படமானது அரசியல் பற்றி பேசும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு காதல்,பேண்டஸி திரைப்படங்களை இயக்கி கொண்டிருந்த செல்வராகவன் நீண்ட காலம் கழித்து ஒரு அரசியல் படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியானபோதே பல அரசியல் தலைவர்களை கிண்டல் செய்வது போல படத்தில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கட் அவுட் அகற்றப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னால் பல பிரபல ஹீரோக்களுக்கும் இது போல பல இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் அனுமதியோடு வைக்கப்பட்டவைதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வளவு ஏன்? சூர்யாவுக்கே இதற்கு முன்னால் நடித்த பல படங்களுக்கு நெடுஞ்சாலை பகுதிகளில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது எல்லாம் வராத பிரச்சினை என்.ஜி.கேவுக்கு மட்டும் வருகிறது.

இப்படி ஒரு பக்கம் பேசி கொண்டிருந்தாலும் சூர்யா ரசிகர்களை தாண்டி சாமானிய மக்கள் பலபேர் 7 லட்சம் செலவு செய்து கட் அவுட் தேவையா? என்ற கேள்வியையும் கேட்டுள்ளனர். ‘அகரம்’ போன்ற தொண்டு நிறுவனம் மூலம் பல ஏழை எளிய மக்களுக்கு கல்வி தரும் சூர்யா, அவரது ரசிகர்கள் இதுபோன்ற வீண்செலவுகளில் ஈடுபடுவதை கண்டுகொள்ளாதது ஏன் என்றும் கேள்விகள் உண்டாகின்றன.

”சர்க்கார்” திரைப்படம் வெளியானபோது அதில் சில அரசியல் தலைவர்களை மறைமுகமாக விமர்சிப்பதாக கூறி பல காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. நாளை என்.ஜி.கே வெளியாகவிருக்கும் நிலையில் அது என்ன விதமான அரசியல் படமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்