பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழா!

J.Durai
புதன், 21 ஆகஸ்ட் 2024 (09:58 IST)
பன்னாட்டு திரை பண்பாடு ஆய்வகத்தின் மூன்றாமாண்டு துவக்க விழாவில்
இளங்கலை திரைப்படக் கல்வியும் (B.Sc Film Studies) மற்றும் ஓராண்டு முதுகலை திரைப்பட இயக்க பட்டய படிப்பும் (PG Diploma in Film Direction) சிறப்பு விருந்தினர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். 
 
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்கும் நோக்கத்தில் பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் 19-08-2022 அன்று நிறுவப்பட்ட
இந்நிறுவனம் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாமாண்டு துவக்க  விழாவையொட்டி மேற்கண்ட படிப்புகள் துவங்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நிறுவனத் தலைவர் வெற்றிமாறன்,
ஆர்த்தி வெற்றிமாறன் மற்றும் பேராசிரியர் ராஜநாயகம்,வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வில் பேசிய  விஜய்சேதுபதி.......
 
இந்த நிறுவனத்தின் பயணத்தில் என்னை சேர்த்துக் கொண்ட வெற்றிமாறன் உட்பட அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.இதற்கு முன்பு பேசிய மாணவர்கள் பேச்சின் மூலம் இங்கு கிடைக்கும் கல்வியின் மூலம் அவர்களுக்கு அரசியல் தெளிவு சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது பலமடங்கு அதிகமாகும். எப்போது கற்றுக் கொள்ள தயாராக இருங்கள். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என வாழ்த்தினார்.
 
தயாரிப்பாளர் 'கலைப்புலி 'எஸ்.தாணு பேசியது......
 
இக்கல்வி நிறுவனத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறந்த நிலையை அடையும் என்று வாழ்த்தினேன், அவ்வாறே இன்று மூன்றாமாண்டில் புது பட்டப் படிப்புகளுடன், இயக்குனர் வெற்றிமாறன், பேராசிரியர் ராஜநாயகம் ஆகியோரது வழிகாட்டுதல்களுடன் சிறப்பாக அடியெடுத்து வைப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்களது நிறுவனமும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று உறுதி அளித்து, ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
இயக்குனர் வெற்றிமாறன் பேசியது......
 
மாணவர்களை தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் துவங்கப்பட்டது.  குறிப்பிட்ட ஒரு துறைதான் என்றில்லாமல் பல்வேறு தளங்களிலும் மாணவர்கள் பயணிக்க வேண்டும். அதேபோல இந்நிறுவனம் துவங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த வெற்றிதுரைசாமி அவர்களின் நினைவாக 'வைல்ட் லைஃப் போட்டோ கிராபி'க்காக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்கள் கௌரவிக்கப் படுவார்கள். எங்களுடன் தோள்கொடுக்க வந்திருக்கும் விஜய் சேதுபதி, எங்களுக்கு பல விதத்திலும் உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு மற்றும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார், எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பல்வேறு உதவி புரிந்து கொண்டிருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி வேலன் அவர்களுக்கும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் பேராசிரியர் ராஜநாயகம் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்