லாபட்டா லேடீஸ் ஆஸ்கருக்கு செல்வதை ஏற்றுகொள்ள முடியாது… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம்!

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (07:42 IST)
உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு பல விருதுகள் அளிக்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருது திரைத்துறையில் மிக உயரியதாக கருதப்படுகிறது.  ஆனால் இது அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில்தான் மற்ற நாட்டு படங்கள் கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் கொட்டுக்காளி, வாழை மற்றும் தங்கலான் போன்ற படங்கள் இருந்த நிலையில் அவை தேர்வு செய்யப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘கொட்டுக்காளி, தங்கலான், வாழை மற்றும் மகாராஜா போன்ற கருத்தும், கதையும், தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் இறுதிப் பட்டியலில் இருந்தும் இந்திப் படம் என்ற ஒரே காரணத்துக்காக ’லாபட்டா லேடீஸ்’ தேர்வு செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த படம் பல்வேறு கருத்துகளை சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை. என்ன மொழியில் படம் உள்ளது என்பதைப் பார்க்காமல் திரைமொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அனுப்பினால் மட்டும் நமக்கு ஆஸ்கர் கிடைக்கும்.  இந்தியாவில் மட்டும் ஆஸ்கர் தேர்வுக்கான படம் இந்தியாவிலேயே தோற்றுவிடுகிறது” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்