ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

Prasanth Karthick

திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:55 IST)

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவிலிருந்து ‘லாப்பட்டா லேடிஸ்’ என்ற இந்திப்படம் தேர்வாகியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு பல விருதுகள் அளிக்கப்பட்டாலும், ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருது திரைத்துறையில் மிக உயரியதாக கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் சிறந்த திரைப்படத்தை அனுப்ப முடியும்.

 

அவ்வாறாக ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட சில படங்கள் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்கருக்கு அனுப்புவதற்கான படங்களின் பரிந்துரையில் தமிழில் இருந்து விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, மாரி செல்வராஜின் வாழை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பா.ரஞ்சித்தின் தங்கலான், வினோத்குமார் இயக்கிய கொட்டுக்காளி உள்ளிட்ட 28 படங்கள் பரிந்துரையில் இருந்தன.
 

ALSO READ: யோகி பாபு சொல்றது பன்ச்… காமெடி இல்லை – நடிகர் ரமேஷ் கண்ணா அதிருப்தி!
 

அவற்றில் இருந்து இந்தியில் வெளியான லாப்பட்டா லேடிஸ் என்ற திரைப்படத்தை ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பு தேர்வு செய்துள்ளனர். இது தமிழ் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது.

 

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கமர்ஷியல் வெற்றி அளித்தது மட்டுமல்லாமல், நெட்ப்ளிக்ஸ் மூலமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் அதிகம் பார்த்த தமிழ்ப்படமாக உள்ளது. வினோத்குமாரின் கொட்டுக்காளி திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படங்களை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யாமல் இந்தி படத்தை தேர்வு செய்துள்ளது குறித்து சினிமா ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்