தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்தலில் விஷால், பாக்யராஜ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 29 பதவிகளுக்கு 79 பேர் இரு அணியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பாக்யராஜ், 'தனக்கு ரஜினி மற்றும் கமல் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், ரஜினி கூறியதால்தான் இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், தான் தலைவர் பதவியேற்றால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கூறியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பல நடிகர்கள் ரஜினி, கமல் இருவருமே பாக்யராஜ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக எண்ணினர்
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஷால், 'ரஜினி, கமல் இருவருமே அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கவில்லை. எனவே ரஜினி, கமல் ஆதரவு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். தேர்தலில் போட்டியிடும் இரு அணியினர்களும் மரியாதை நிமித்தமாக ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து இதுவரை என்ன செய்துள்ளோம், இனிமேல் என்ன செய்வோம் என்பதை விளக்குவோம். அதன்பின்னர் அவர்கள் யாருக்கு ஆதரவு? என்பதை முடிவு செய்வார்கள்' என்று கூறினார்.
மேலும் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இந்த ஆண்டு நிச்சயம் கட்டிட திறப்பு விழா நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.