மக்களின் அன்பே மருந்து...விரைவில் சந்திப்போம் – கமல் டுவீட்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (22:59 IST)
மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம் என நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறவேண்டி, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சியினரும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சினிமா, பிக்பாஸ் என்ற சின்னத்திரை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் தற்போது அரசியலில் குறித்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகி வந்த நிலையில் ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொண்டு தனது காலில் அறுவைச் சிகிச்சை செய்ய இருப்பதாக  நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று கமல்ஹாசனுக்கு இன்று சர்ஜரி நடந்ததாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் மகள்கள் அக்ஷரா ஹாசன் மற்றும் சுருதிஹாசன் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகத்துடன் இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும்.

மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம். எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைதுள்ளனர். மேலும் விரையில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தினர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்