கன்னட நடிகரை வரவேற்கிறோம்... நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்ட பீரங்கிபுரம் விழாவின் முழு விவரம்

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:18 IST)
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பீரங்கிபுரம் என்ற படம் தயாராகிறது. அதன் பர்ஸ்ட் லுக் சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவில் ஸ்ரீகாந்த், நமிதா போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

 
 
காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக கன்னட நடிகர்கள் தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக மக்களையும் கீழ்த்தரமாகப் பேசி போராட்டம் நடத்தினார்கள். தமிழர்களுக்கு எங்களின் மூத்திரத்தை தருகிறோம் என்கிறார் வாட்டாள் நாகராஜ். 
 
ஆனால் தமிழகத்தில்...? கன்னட நடிகரை வரவேற்கிறோம் என்று, பீரங்கிபுரம் படவிழாவில் பேசுகிறார் ஸ்ரீகாந்த். அதனை தமிழகம் அனுமதிக்கிறது. சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருந்தது அந்நிகழ்வு. 
 
பீரங்கிபுரம் படத்தை ஜான் ஜானி ஜனார்த்தனா இயக்குகிறார். விழாவில் அவர் பேசியதாவது...

 
 
"எனக்குச் சொந்த ஊர் திருத்தணிதான். நான் பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன். சினிமா பற்றி பல்வேறு விதத்தில் ஆய்வுகள் செய்தேன். அப்படி உருவானதே இந்தக் கதை. மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே நடக்கும் உளவியல் ரீதியான போர்தான் இக்கதை. கதை சென்னை முதல் ராஜஸ்தான்வரை போகிறது. பீரங்கிபுரம் ராஜஸ்தானில் என் கற்பனையில் உருவாகியுள்ள கிராமம். முழுக்க முழுக்க ராஜஸ்தானில் படமாகவுள்ள தமிழ்ப்படம் இதுவாகவே இருக்கும். படத்தில் ஒப்பனைக்கு முக்கியத்துவம் உண்டு. நடிப்பவர்கள் பலரும் நாடக நடிகர்கள். பிற நடிகர்கள் அனைவருக்கும்.
 
முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டு நடிக்க வைக்கிறோம். உமா மகேஷ்வர் மேக்கப்பில் பேசப்படுவார். நாயகனின் தோற்றத்துக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார். 
 
சோதனை முயற்சியாக இப்படத்தை எடுக்க விரும்பினேன். இது ஒரு முன்னுதாரண படமாக இருக்கும் வகையில் உழைத்து வருகிறோம்" என்றார். 
 
நாயகனாக நடிக்கும் சஞ்சாரி விஜய் பேசும்போது,

 
 
"தமிழில் இது எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நான் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. அதே நேரம் இப்போது தமிழ்நாட்டு இயக்குநர் பாரதிராஜா அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால் தேசிய விருது தேர்வுக்குழுவின் தலைவராக அவர் இருந்த போதுதான் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. நான் அந்தப் படத்தில் மாற்றுப் பாலின பாத்திரத்தில் ஒரு திருநங்கையாக நடித்திருந்தேன். 
 
அதே போலவே இதுவும் பொன்னான வாய்ப்பு .நான் கமல், விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்களிள் பெரிய ரசிகன். சிறுவயது முதல் அவர்கள் நடிப்பை ரசித்து வளர்ந்தவன். 
 
தேசிய விருது பெற்ற 'நானு அவனுள்ள அவளு' படம் போலவே இந்த பீரங்கிபுரம் படமும் வித்தியாச முயற்சிதான். இதில் இளைஞன் தோற்றம் நடுத்தர வயது தோற்றம் முதிய தோற்றம் என மூன்று வகை தோற்றங்களில் வருகிறேன். 
 
இது ஒரு சைகாலஜிக்கல் த்ரில்லர் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமையும். வேறு படவாய்ப்புகளையும் தேடித்தரும்" என்றார். 
 
நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது, 
 
"கன்னட மொழியிலிருந்து தேசியவிருது பெற்ற நடிகர் இங்கே தமிழில் நடிக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவர் மொழி தெரியாது பேசினார். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி வேறுபாடு எல்லாம் கிடையாது. இது கர்நாடகத்துக்கும் பொருந்தும் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். அவரை வாழ்த்துகிறேன். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கே இவ்வளவு உழைத்திருக்கிறார்கள். 
 
சினிமாவில் படப்பிடிப்புக்குப் போய் யோசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு படம் தொடங்கும் முன்பாகவே ஆறுமாதம் ஒரு வருடம் என்று முன் தயாரிப்பு வேலைகள் செய்திருக்கிறார்கள். நன்றாக ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி எல்லாரும் செய்தால் காலவிரயம் பண விரயம் ஆகாது. இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்" என்றார். 
 
நடிகை நமீதா பேசும் போது, 
 
"அண்மையில் டோண்ட் ப்ரீத் என்கிற படம் பார்த்தேன். ஒன்றே முக்கால் மணி நேரத்தில் 1 மணி 10 நிமிடங்கள் வசனமே இல்லை. அப்படி ஒரு பரபரப்பு இருந்தது. எனவே படம். பிடித்து விட்டது. சினிமாவுக்கு மொழி முக்கியமல்ல. எனக்கு காமெடி, ஆக்ஷன், சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் .பீரங்கிபுரம் படமும் இந்த வகையில் அடங்கும். ஜான் ஜானி ஜனார்த்தனா என்கிற இயக்குநர் பெயரைப் பார்த்தும் அந்தக்கால அமிதாப் படம் ஜான் ஜானி ஜனார்த்தன் நினைவுக்கு வந்தது. இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.
அடுத்த கட்டுரையில்