2016 -ஆம் ஆண்டில் தமிழ் சினிமா சாதிக்கப் போகிறதா இல்லை வழக்கம் போல் பரிதாபமாக தோற்கப் போகிறதா என்பதை அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் தீர்மானிக்க போகின்றன.
அக்டோபர் மாதத்தில் தமிழின் எதிர்பார்ப்புக்குரிய பல படங்கள் வெளியாவதால் அக்டோபர் மாதத்தை தமிழ் சினிமா உற்று கவனிக்கிறது.
பண்டிகை காலத்தில் படங்களை வெளியிட்டால் சுமார் படங்களும் சூப்பராக வசூலிக்கும். அதனால், பண்டிகைகால விடுமுறையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த அனைத்து தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவது இயல்பு.
இந்த வருடம் அக்டோபர் மாதம் 10 -ஆம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜை வருகிறது. அன்று விடுமுறை. மறுநாள் 11 -ஆம் தேதி விஜயதசமி. இரண்டு விடுமுறைகள் வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை - அதாவது 7- ஆம் தேதி படத்தை வெளியிட்டால் மூன்றுநாள் வார இறுதி வசூலுடன் திங்கள், செவ்வாய் விடுமுறை நாள் வசூலையும் அள்ளலாம். ஐந்து தினங்களில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். அதனை மனதில் வைத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை அக்டோபர் 7 வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் 80 சதவீத ஏரியாக்கள் விற்கப்பட்டுவிட்டன. அனைத்தும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது. ஐந்து தினங்கள் டிக்கெட் கட்டணத்தை அதிகம் வைத்து விற்று போட்ட பணத்தை எடுக்கலாம் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ரெமோவுடன் டிகே இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம், விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க ஆகிய படங்களும் மோத உள்ளன. ரெமோ படத்தை அதிக விலைக்கு வாங்கியுள்ளதால் அதிக திரையரங்குகளில் அப்படம் வெளியாகும். அதனால் கவலை வேண்டாம், றெக்க படங்களுக்கு எவ்வளவு திரையரங்குகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறி. திரையரங்குகளின் எண்ணிக்கையை பொறுத்தே இவ்விரு படங்களும் வெளியாகும்.
தமிழகத்தில் தீபாவளிதான் மிகப்பெரிய பண்டிகை. முன்பெல்லாம் ஐந்தும் ஆறும் படங்கள் வெளியாகும். ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியீடு என்ற புதிய கொள்கை காரணமாக தீபாவளிக்கு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலே அபூர்வம் என்றாகிவிட்டது. இந்த வருடம் அக்டோபர் 29 -ஆம் தேதி தீபாவளி வருகிறது. அதனை முன்னிட்டு காஷ்மோரா, கத்திச்சண்டை, கொடி ஆகிய படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். கமலின் விஸ்வரூபம் 2 படமும் தீபாவளிக்கு வரும் என ஓர் வதந்தி உலவுகிறது.
நேற்று வெளியான வாகா, ஜோக்கர் இரண்டுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அடுத்தவாரம் தர்மதுரை, நம்பியார் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதையடுத்து 25 -ஆம் தேதி குற்றமே தண்டனை, மீண்டும் ஒரு காதல் கதை இரண்டும் வெளியாகின்றன. பல வருடங்களாக இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருக்கும் வா டீல் படம் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
செப்டம்பர் மாதம் விக்ரமின் இருமுகன், தனுஷின் தொடரி, விஜய் ஆண்டனியின் சைத்தான் என மூன்று முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன.
ஆக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளியாகும் படங்களின் வெற்றி தோல்விகளே இந்த வருட தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்க உள்ளன.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்