சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணியாற்றி வந்துள்ளார் இளம்பெண் ஒருவர். கடந்த மாதம் 24ம் தேதி இவர் பணியில் இருந்தபோது இவருக்கு பணிகளை பிரித்து வழங்கும் போலீஸ் ஏட்டு இவரை தொடர்புக் கொண்டு ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு தனிப்பட்ட பாதுகாவலராக செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
அதன்பின்னர் வேறு ஒரு எண்ணிலிருந்து ஃபோன் வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன்னை சென்னை கூடுதல் துணை கமிஷனர் என்று அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார். பின்னர் அந்த இளம் காவலாளி பெண் தான் சொல்லும் ஒரு பணக்காரரை சென்று சந்திக்க வேண்டும் என்றும், அவரது ஆசைக்கு இணங்கி அவர் சொல்லும்படி நடந்து கொண்டால் பதவி உயர்வு, புதிய வீடு ஆகியவை கிடைக்கும் என்றும் இளம்பெண்ணுக்கு தூண்டில் போட்டுள்ளார். ஆனால் அந்த இளம் காவலாளி பெண் இதுகுறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளிக்க போவதாக சொன்னதும், அதுவரை பெண் குரலில் பேசிக் கொண்டிருந்த அந்த நபர் ஆண் குரலில் எச்சரிக்கும் விதத்தில் பேசிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து பெண் காவலர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், சைபர் க்ரைம் உதவியுடன் நடவடிக்கை எடுத்த போலீஸார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பெரியசாமி மீது திருப்பூர், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பெண் காவலர்களை குறிவைத்து உயர் அதிகாரி போல பேசி உல்லாச அழைப்பு விடுத்த வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.