தமிழ்நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது ஏன்? - முழுப் பின்னணி

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:48 IST)
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஒன்பதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
 
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகமெங்கும் பேசுபொருளாக தொடங்கியபோது, இந்தியாவில் இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியை இந்தியாவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். ஊடகங்களும் அதை வைத்து விவாதங்களை நடத்தின.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கலாம்.
 
எனவே, வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.
 
இந்திய கல்வி சூழல்
இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பயில்கின்றனர். தேசிய அளவிலான சராசரி மொத்தப் பதிவு விகிதம் 27.1, அதாவது 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவு. இருப்பினும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
 
ஏன் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற‌ மாணவர்கள் விரும்புகிறார்கள்?
 
இதற்கு பல காரணங்கள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது அல்லது வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.
 
வெளிநாடுகளில் ப‌ல்கலாசாரச் சூழலில் (Multicultural) மாறுபட்ட கல்வித் திட்டத்தில் பயிலும் போது மாணவர்களுக்கான கற்றலின் நோக்கத்தில் (Learning outcomes) நல்ல பலனைப் பெற இயலும் என மாணவர்கள் திடமாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு பிரிட்டனில் ஓராண்டு காலத்திற்குள் முதுநிலை கல்வி பயிலவும் வாய்ப்புண்டு, மேலும் ஆய்வு சார் பாடத்திட்டங்கள் (Research led curriculum) நேரடியாக தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பையும் தருகிறது. இதுபோன்று இன்ன பிற காரணங்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இனி வரும் வருடங்களில் அதிகரிக்கவே செய்யும். அவ்வாறு அதிகரிப்பின் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கு ஆகும் செலவினம் 2024ஆம் ஆண்டில் 80 பில்லியன் டாலர்களைத் தொடும் என RedSeer நிறுவனம் கணிக்கிறது.
 
வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களில் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா வரிசையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் உள்ள மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கான விழிப்புணர்வு அல்லது அதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன.
 
குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம், மற்றும் எங்கு என்ன படிப்புகளை எடுத்து பயிலலாம்? என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்?, நுழைவுத் தேர்வு அல்லது தகுதித் தேர்வுகள் எழுத வேண்டுமா? உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகளை எப்படி அறிந்து கொள்வது, அதற்கான உத்திகள் என்ன? என பல்வேறு ஐயங்கள் நம் மாணவர்களுக்கு உள்ளது. இவை குறித்த தகவல்களை சற்றே விரிவாக இங்கே பார்ப்போம்.
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை எப்படி அறிந்து கொள்வது?
ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது, அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிக்கை இதழ்கள், புள்ளி விபர நிறுவனங்கள், இதரவை) மூலம் வெளியிடப்படுகிறது. உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும் Quacquarelli Symonds மற்றும் Elesevier நிறுவனமும் இணைந்து வெளியிடும் உயர்கல்வி நிறுவனங்களுங்கான தரவரிசைப் பட்டியல் அதிக கவனம் பெற்றவை.
 
இந்த‌ தர வரிசை தேர்வானது 5 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியது. 1. கல்வி சக மதிப்பாய்வு, 2. ஆசிரியர்/மாணவர் விகிதம், 3. ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள் (ஆய்வு கட்டுரைகள்), 4. நிறுவனத்தின் நன்மதிப்பு, 5. சர்வதேச மாணவர் விகிதம், 6. சர்வதேச பணியாளர் விகிதம்.
 
வெளிநாடுகளில் பயில வேண்டும் என திட்டமிடும் மாணவர்களுக்கு இந்த தரவரிசைப்பட்டியல் மிக உதவியாக இருக்கும்.
 
குறிப்பாக 5 மற்றும் 6வது அம்சங்களில் மதிப்பிடப்பட்டிருக்கும் சர்வதேச மாணவர் மற்றும் பணியாளர் விகிதத்தைக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு பரந்து பட்ட சர்வதேச கட்டமைப்பை தங்கள் வளாகத்திற்குள் கொண்டிருக்கிறது என விளங்கி கொள்ள இயலும். அதே போல பிரிட்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் (Guardian) இதழ் மற்றும் thecompleteuniversityguide.co.uk இணையதளங்களின் தர வரிசைப் பட்டியலை ஓரளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது. கனடா நாட்டில் இருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் வெளியிடும் அந்நாட்டிற்கான‌ தர வரிசைப் பட்டியலையும் நல் உதாரணமாகக் கொள்ளலாம். ஆகவே ஒரு மாணவர் அந்தந்த நாடுகளில் இருந்து வெளிவரும் இதுபோன்ற நம்பகத்தன்மை வாய்ந்த தர வரிசைப் பட்டியலை முன் கள ஆய்வு செய்து கொள்வது சிறந்தது.
 
வெளிநாடுகளில் உயர்கல்வி பெற தகுத்தேர்வு ஏதேனும் உள்ளதா?
 
இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்திய உயர்கல்விச் சூழல் என்பது மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வு எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். ஆனால் அத்துடன் ஒரு சில நாடுகளுக்கு மொழியறிவுச் சான்றிதழ் மிக முக்கியமானது. அது குறித்து தகவலை முதலில் விரிவாக பார்ப்போம்.
 
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை எப்படி அறிந்து கொள்வது?
ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது, அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிக்கை இதழ்கள், புள்ளி விபர நிறுவனங்கள், இதரவை) மூலம் வெளியிடப்படுகிறது. உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும் Quacquarelli Symonds மற்றும் Elesevier நிறுவனமும் இணைந்து வெளியிடும் உயர்கல்வி நிறுவனங்களுங்கான தரவரிசைப் பட்டியல் அதிக கவனம் பெற்றவை.
 
இந்த‌ தர வரிசை தேர்வானது 5 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியது. 1. கல்வி சக மதிப்பாய்வு, 2. ஆசிரியர்/மாணவர் விகிதம், 3. ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள் (ஆய்வு கட்டுரைகள்), 4. நிறுவனத்தின் நன்மதிப்பு, 5. சர்வதேச மாணவர் விகிதம், 6. சர்வதேச பணியாளர் விகிதம்.
 
வெளிநாடுகளில் பயில வேண்டும் என திட்டமிடும் மாணவர்களுக்கு இந்த தரவரிசைப்பட்டியல் மிக உதவியாக இருக்கும்.
 
குறிப்பாக 5 மற்றும் 6வது அம்சங்களில் மதிப்பிடப்பட்டிருக்கும் சர்வதேச மாணவர் மற்றும் பணியாளர் விகிதத்தைக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு பரந்து பட்ட சர்வதேச கட்டமைப்பை தங்கள் வளாகத்திற்குள் கொண்டிருக்கிறது என விளங்கி கொள்ள இயலும். அதே போல பிரிட்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் (Guardian) இதழ் மற்றும் thecompleteuniversityguide.co.uk இணையதளங்களின் தர வரிசைப் பட்டியலை ஓரளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது. கனடா நாட்டில் இருந்து வெளிவரும் டைம்ஸ் இதழ் வெளியிடும் அந்நாட்டிற்கான‌ தர வரிசைப் பட்டியலையும் நல் உதாரணமாகக் கொள்ளலாம். ஆகவே ஒரு மாணவர் அந்தந்த நாடுகளில் இருந்து வெளிவரும் இதுபோன்ற நம்பகத்தன்மை வாய்ந்த தர வரிசைப் பட்டியலை முன் கள ஆய்வு செய்து கொள்வது சிறந்தது.
 
வெளிநாடுகளில் உயர்கல்வி பெற தகுத்தேர்வு ஏதேனும் உள்ளதா?
இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்திய உயர்கல்விச் சூழல் என்பது மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வு எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். ஆனால் அத்துடன் ஒரு சில நாடுகளுக்கு மொழியறிவுச் சான்றிதழ் மிக முக்கியமானது. அது குறித்து தகவலை முதலில் விரிவாக பார்ப்போம்.
 
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் ஆங்கில மொழிப் புலமையில் அவர்கள் பரிந்துரைக்கும் தகுதித் தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் IELTS (International English Language Testing System) எனப்படும் ஆங்கில மொழிப்புலமைத் தகுதித் தேர்வில் இளநிலை படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.0 மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.5 புள்ளிகளை (Band) பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆங்கிலத்தை கேட்பது, படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் என்ற பிரிவுகளில் மதிப்படுப்படுவது. இந்த தேர்விற்கு கட்டணம் உண்டு, மேலும் இந்த தேர்விற்கான சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் அதற்கேற்ப மாணவர்கள் இத்தேர்வை திட்டமிடுவது நல்லது. IELTS போலவே மற்றொரு ஆங்கில புலமை தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக் கொள்கிறது. ஆகவே எந்த நாட்டிற்கு எந்த மொழிப் புலமைத் தேர்வு எழுத வேண்டும் என்று சரிப் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
 
இளநிலை படிப்புகளுக்கு மதிப்பெண்களைப் பொறுத்து தகுதி அடிப்படை என்பது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடும். இந்தியாவில் சிபிஎஸ்சி மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தில் (CBSE/ISC Standard) பனிரெண்டாம் வகுப்பு பயின்றவர்கள் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில குறைந்த பட்சம் பன்னிரெண்டாம் வகுப்பில் 80-95% எடுத்திருக்க வேண்டும். இந்த விழுக்காடு ஒவ்வொரு துறைக்கும் (Department) மாறுபடும். இந்தியாவின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள‌ மாநிலப் பாடத்திட்டத்தின் (State board) கீழ் பயிலும் மாணவர்களும் பிரிட்டனில் நேரடியாக நுழைவுத் தேர்வு இல்லாமல் இளநிலை படிப்புகளை பயிலலாம். ஆனால் இவர்கள் மருத்துவத்துறையில் சேர இயலாது. ஆகவே ஒவ்வொருத் துறைக்கும் தேவையான குறைந்த பட்ச மதிப்பெண் விழுக்காடு குறித்த தகவலை பெறுவது மிக முக்கியமானது. இத்தகவலை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும்/ கல்வி நிறுவனத்திலும் உள்ள‌ சர்வதேச அலுவலகம் (International Office) வாயிலாக மின்னஞ்சல் முலம் பெறலாம்.
 
முதுநிலை படிப்புகளுக்கு இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது ஒப்பீட்டளவில் இளம்நிலை படிப்புகளை விட மிக அதிகம். குறிப்பாக அறிவியல் மற்றும் பொறியியல், கணிப்பொறி நுட்பம், மேலாண்மை, செவிலியர் மற்றும் மருத்துவ பிரிவுகளில் சிறப்பு படிப்புகள் (Specialized courses) பயிலவே பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை உள்நாட்டில் சிறப்பு படிப்புகளை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 60% அதிகம். இவற்றில் சில பாடப் பிரிவுகளுக்கு கல்வி பயில உதவித் தொகை கிடைக்கும்.
 
உதாரணத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஜப்பான் நாட்டில் முதுநிலை ஆய்வு படிப்பு பயில Monbukagakusho (MEXT) Scholarship திட்டம் மூலம் மாதம் 1,44,000 யென் (90 ஆயிரம் ரூபாய்) வழங்குகிறது. மேலும் கல்விக் கட்டணத்தை இத்திட்டம் நேரடியாகவே கல்வி நிறுவனங்களில் செலுத்தி விடுகிறது. இதற்கான விண்ணப் படிவத்தை அந்தந்த நாடுகளில் உள்ள ஜப்பானிய தூதரகம் மூலம் தருகிறார்கள், அல்லது இணையதளம் வாயிலாகவும் பெறலாம். இதே போல தென்கொரியா நாட்டு அரசு அங்கு முதுநிலைப் படிப்புகளுக்கு உதவித் தொகை (Global Korea Scholarship) வழங்குகிறது.
 
ஐரோப்பிய ஒன்றியம் (Europe Union) தனது உறுப்பு நாடுகளில் முதுநிலைப் படிப்புகள் பயில Erasmus Mundus Scholarship திட்டம் மூலம் உதவுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பே முதுநிலை மாணவர்கள் ஒவ்வொரு பருவ பாடத்திட்டத்தையும் (Semester) ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் பயில முடியும். குறைந்த பட்சம் முதுநிலை படிப்பினை 3 நாடுகளில் பயிலும் வாய்ப்பை இத்திட்டம் தருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு திறன் அறிவு (Skills) மற்றும் பயிற்சியினை (Training) பெற முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. இவை தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்கென்று தனித்த உதவித் தொகை திட்டங்களை முதுநிலை மாணவர்களுக்கு தருகிறது.
 
பொதுவாக இரண்டு வழிகளில் முதுநிலை படிப்புகளை வெளிநாடுகளில் உதவித் தொகையுடன் பயிலலாம்.
 
1. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள உதவித் தொகை திட்டத்திற்கு (Scholarship) விண்ணபித்து அதன் வாயிலாக செல்வது.
 
2. சுயநிதி (Self financing) மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பயில்வது. 2,000 முதல் 5,000 டாலர் வரை சிறிய‌ உதவித் தொகைகளை பல்கலைக்கழகம் அல்லது தன்னார்வலர் அமைப்புகள் வழங்குகின்றன. இவை ஓரளவிற்கு சுயநிதி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
 
பல்வேறு நாடுகளில் முதுநிலை கல்விக்கான உதவித் தொகை குறித்த தகவல்கள் www.findamasters.com போன்ற‌ இணையத் தளங்களில் எளிதாக கிடைக்கிறது. அதே நேரம் குறிப்பிட்ட‌ உதவித் தொகை திட்டங்கள் தொடர்ந்து சமகாலத்தில் நடைபெறுகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட நாடுகள் தங்கள் தாய்மொழியை முதல் பருவத்தில் ஒரு சில மாதங்களுக்கு புதுமுக பயிற்சியாக‌ இலவசமாக கற்றுத் தருகிறது. ஆகவே மொழி தெரியவில்லை என்ற கவலை வேண்டாம். தென் கொரியா போன்ற நாடுகள் முதுநிலை படிப்புகளுக்கான உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அடிப்படை அளவில் கொரிய மொழி (Test of Proficiency in Korean - TOPIK) அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது. ஆகவே முதுநிலை படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் பிற மொழி கற்கும் சூழல் அமைந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
விசா (Visa) பெறுவது எப்படி?
 
வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் எந்த நாட்டிற்கு போக வேண்டும் என முடிவெடுத்த பின் செய்ய வேண்டிய முதல் பணி, அந்த நாட்டின் குடியேற்றத்திற்கு (Visa) தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்களை தூதரக (Embassy) இணைய தளம் மூலம் தெரிந்து கொள்வது அத்தியாவசியமானது. குறிப்பாக, பிரிட்டன் போன்ற நாடுகள் விண்ணப்பதாரர் குறைந்தது ஆறு மாதம் நடப்பில் உள்ள வங்கி கணக்கை ஒரு ஆவணமாக சமர்பிக்குமாறு கேட்பார்கள். எனவே இதுபோன்ற தகவல்களை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம். மேலும், கல்விச் சான்றிதழ்களை (Testimonial) உரிய நேரத்தில் பெற்று வைத்திருத்தல் அவசியம். பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இளநிலை பட்டய படிப்பின் மொத்த‌ மதிப்பெண் பட்டியலை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் அதிகாரபூர்வ அலுவலகத்தின் முத்திரை பதித்த மூடிய உறைக்குள் சீலிட்டு (Transcripts) கேட்பார்கள். ஆகவே இது போன்ற ஆவணங்களை முன் கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
 
சில நாடுகள் இந்திய மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நம்பகத் தன்மை (Creditability) அல்லது தங்கள் நாட்டின் கல்வித் திட்டத்திற்கு இணையாக (Equivalent certificate) மாணவரின் கல்விச் சான்றிதழ் உள்ளதா எனவும் கேட்பார்கள். இதற்கான சான்றளிப்பை (Attestation) இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட நாட்டின் தூதரக அலுவலகம் மூலம் பெற்று கொள்ளலாம். நாம் கல்விக் கட்டணத்தை உரிய நேரத்தில் ஒவ்வொரு பருவத்திற்கும் செலுத்த இயலும் என்பதற்கான வங்கி கணக்கு ஆதாரத்தை விசா பெறும் போது சமர்பிக்க வேண்டும். ஆகவே வங்கிக் கடன் மூலம் செல்லும் சுயநிதி (Self financing) மாணவர்கள் முன் கூட்டியே வங்கி இருப்பில் இருக்க வேண்டிய சேமிப்பு தொகை குறித்து திட்டமிடுதல் அவசியம். உதவித் தொகை (Scholarship) மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு அந்த கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அனுமதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். விசா பெறுவதில் சுயநிதி மாணவர்களைப் போல இவர்களுக்கு அதிக சிரமம் இருக்காது.
 
ஒவ்வொரு நாட்டின் தூதரகங்கள் அவ்வப்போது தங்களது குடியேற்றத்திற்கான விதிமுறைகளை (Visa regulations) மாற்றிக் கொண்டே இருப்பர். ஆகவே இத்தகவலை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்திக் கொள்வது நல்லது.
பெரும்பாலான மாணவர்கள், விசா வாங்குவதற்கு தனியார் நிறுவனங்களை அணுகுகின்றனர். இயன்ற வரை நீங்கள் விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் (Authorised agency) வாயிலாக விண்ணப்பிப்பது பாதுகாப்பானது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வது குறித்த பல்வேறு தகவல்களை இந்த கட்டுரையில் அறிந்திருப்பீர்கள். இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சிக்கான‌ வாய்ப்பு எப்படி உள்ளது? அதனை எப்படி அறிந்து கொள்வது? வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு உதவித் தொகை கிடைக்குமா? போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கும் அடுத்த கட்டுரை, பிபிசி தமிழின் இதே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடரில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாகும்.
 
(இக்கட்டுரையின் ஆசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து, தற்போது பிரிட்டனில் உள்ள கெரியட் வாட் பல்கலைக் கழகத்தில் (Heriot-Watt University) உள்ள நுட்பம் மற்றும் இயல் அறிவியல் (School of Engineering and Physical Sciences) பள்ளியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். சூரிய ஆற்றல் மூலம் நானோ அளவிலான குறைகடத்தி வினையூக்கிகள் உதவியுடன் எவ்வாறு மின் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் வாயுவை தயாரிப்பது என்ற ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளார். நானோ நுட்பம் சார்ந்த ஆற்றல் கருவிகள் வடிவமைப்பில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழ்களில் பிரசுரித்துள்ளார். ஐப்பானிய அரசின் JSPS Fellowship விருதையும், ஐரோப்பிய பிராந்திய‌ வளர்ச்சி நல நிதி மூலம் வேல்சு அரசிற்கான Ser-Cymru II Rising Star விருதையும் பெற்றவர். நானோ நுட்பம் மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து சமூக வலை தளங்களில் தமிழில் எழுதியும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு கருத்தரங்குகளில் பேசியும் வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்