ஜெ. இப்போதைக்கு டிஸ்சார்ஜ் இல்லை? : உண்மை நிலவரம் என்ன?

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (16:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை என்றும், அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, சிறுநீரகத் தொற்று, நுரையீரல் தொற்றும் மற்றும் சுவாச பிரச்சனைகள் என அவர் உடல் நிலைக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
சென்னை அப்பல்லோ மருத்துவர்கள், மும்பை மற்றும் லண்டன் மருத்துவர்களை தொடர்ந்து, தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
ஜெ. உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் இதுவரை 4 அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. அது மட்டுமே அதிகாரப்பூர்வமானதாக இருப்பதால் அதிமுக தொண்டர்கள் அதையே நம்பி, அப்பல்லோ வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.


 

 
அவர் எப்போது சிகிச்சை முடிந்து கார்டன் திரும்புவார் என்று அதிமுக விசுவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் தற்போதைக்கு வீடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
 
தற்போது அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ்நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
அவர் இன்னும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், குறைந்த பட்சம் இன்னும் 10 நாட்களாவது அவர் அப்பல்லோவில் இருப்பார் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்