தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது தனியார் பால்களில் ரசாயணங்கள் கலப்படம் செய்யப்படுவதாக பகீர் குண்டை தூக்கி போட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அதிமுக அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, பாலில் ரசாயண கலப்படம் எனச் சொல்லிவிட்டு நிரூபிக்கத் தவறியதால், தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதவி விலக வேண்டும் என்றார்.
அந்நிலையில் நேற்று சிவகாசியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே வைகைச்செல்வனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. 500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர்தான் இந்த வைகைச் செல்வன் என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகைச்செல்வன் “என்னை கூலிக்கு பேசுகிற பேச்சாளர் என்று குறிப்பிடுவதன் மூலம் ராஜேந்திர பாலாஜி, திராவிட இயக்கத்தையே கொச்சைப்படுத்திவிட்டார். திராவிட இயக்கம் என்பது எழுத்தாலும், பேச்சாலும் வளர்ந்த இயக்கம் என்பது வரலாறு. அந்த வரலாறுகூட தெரியாமல் ஒருவர் அமைச்சராக இருப்பதுதான் காலத்தின் கோலம். தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் தெருத் தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார் ராஜேந்திர பாலாஜி. சேற்றிடம் சந்தனத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும்.
'வசவாளர்கள் வாழ்க' என்பதுதான் திராவிட இயக்கத்தின் பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையோடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மன்னிக்க எனக்கு திராவிட இயக்கம் கற்றுத் தந்திருக்கிறது. ஆகவே அவரை நான் மன்னிக்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.