டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

Siva

ஞாயிறு, 26 ஜனவரி 2025 (16:06 IST)
ஊத்தங்கரையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் திடீரென போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டு கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன்பு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊத்தங்கரையில் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

கைதானவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்கவில்லை என்றும் கைதானவர்களில் சிலர் சர்க்கரை நோயாளிகள் இருப்பதால் அவர்களுக்கு மாத்திரை கூட வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்