அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதில் தனது சொத்து மதிப்பை பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் அளவுக்கு அசையும் சொத்துக்களும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது என்றார்.
மேலும் தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார்.
அதே போல அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனன் தனது பிரமாணப் பத்திரத்தில் 18 லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தனது மனைவி பெயரில், 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 3 கோடியே 30 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தன்மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.