காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என டிடிபி தினகரன் டிவிட்.
தமிழக அரசு மற்றும் மக்களின் இடைவிடாத கோரிக்கையின் பேரில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத சுதந்திர அமைப்பான இது காவிரி படுகை மாநிலங்களை கட்டுப்படுத்தவும், நதிநீரை மாநிலங்கள் பங்கிட்டு கொள்ளவும் வழி வகுக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் பல இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசு மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதிநீர் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல்சக்தி துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த அமைச்சகத்தின் கீழ் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியமும் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இது முற்றிலும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கையே தவிர, இதனால் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளித்தது.
இருப்பினும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக இது ரத்து செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் உரிய அழுத்தங்களை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.