தினகரன் தலைமையில் மேலூரில் பொதுக்கூட்டம் - அதிரடி அறிவிப்புகள் வெளியாகுமா?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:37 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை மதுரை மேலூரில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.


 
 
இரட்டை இலை சின்னம் வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரன், தான் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாக கூறினார். ஆனாலும் அவர் எதிர்பார்த்தபடி அதிமுகவின் இரு அணிகளும் இணையாததால், மீண்டும் கட்சி வேலைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை செயலகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுநாள் வரை அமைதியாக இருந்த தினகரனுக்கு இந்த விவகாரம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில்தான் இன்று மாலை மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
 
இந்த பொதுக்கூட்டத்தில் தினகரன் பல முக்கிய அதிரடி அறிவிப்புகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. தினகரனை நியமித்தது செல்லாது என எடப்பாடி அணி அறிவித்த போது கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத் “ மேலூர் கூட்டத்தில் இதற்கான பதில் இருக்கும்” எனக் கூறியிருந்தார். அதேபோல், கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த கூட்டத்தில் தினகரன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். எடப்பாடி அணியினரின் ஆட்டத்திற்கு இங்கு முடுவுகட்டப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, முதல்வர் பதவியில் எடப்பாடி தொடர வேண்டுமா இல்லையா என்பது உள்பட பல முக்கிய முடிவுகளை தினகரன் அறிவிப்பார் என அவர் கூறியுள்ளார்.
 
அதேபோல், இன்று காலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் “இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி யார் என்பதை தெரிவிப்பேன்” எனக்கூறியுள்ளார்.
 
எனவே, இன்றைய மேலூர் பொதுக்கூட்டம் தினகரன் அறிக்கும் அறிவிப்புகள் மற்றும் தெரிவிக்கும் தகவல்கள் அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்