தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. தேர்தல் கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொள்ள செல்லும் மக்கள் சரக்கு வாகனங்களில் பின்புறம் கூட்டமாக ஏறிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ள போக்குவரத்து ஆணையர் “தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ அல்லது பொதுக்கூட்டத்திற்கோ பொதுமக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தால் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அறிவிப்பை மீறி செயல்பட்டால் வாகனத்தை சிறை பிடித்தல், வாகன அனுமதி சீட்டை ரத்து செய்தல், ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும் அபராதம் உள்ளிட்டவையும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.