புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஏற்கனவே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல்கள், செல்போன் தகவல்கள் பெற்றுள்ள நிலையில் அதனை ஒப்பிட்டு இந்த குரல் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
மேலும் சில உரையாடல்களை வசனமாக எழுதி கொடுத்து பேசச் சொல்லி பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் உண்மை குற்றவாளிகள் பிடிபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட பலரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.