ஆளும் கட்சி - எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களை மக்கள் ரசிக்கிறார்களா ? வெறுக்கிறார்களா ?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (16:07 IST)
தமிழகத்தில் அரசியல் பதற்றம் இல்லாத நாளே இல்லை. பிரேக்கிங் நியூஸ் இல்லாத நாளே இல்லை என்பதற்கிணங்க இன்று மணிக்கொரு முறை பிரேக்கிங் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன. அதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களே அதிகமாகத் தலையங்கங்கள் வகிக்கின்றன. அதிலும் தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகள் அநாகரிமாக பண்பில்லாத பேச்சுகள் தணிக்கையில்லாமல் மக்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இறங்கி முகம் சுளிக்கவைத்ததை யாரும் மறக்கவில்லை.
இந்த நிலையில்,  சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சில அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சுற்றுலாப் பயணம் செய்தார்.
 
இந்தப் பயணத்தின்போது,சுமார் ரூ,.8 ஆயிரத்துக்கு மேலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துவந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு முன்னதாக ஸ்டாலின், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறி, இதுகுறித்து ’வெள்ளை அறிக்கை ’வெளியிட வேண்டும் என கேட்டார். 
 
இதற்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
 
இந்த நிலையில் , ஸ்டாலின் கேட்ட வெள்ளை அறிக்கைக்கு அவருக்கு மஞ்சல், பச்சை, அறிக்கைகள் தருவோம், வெள்ளையறிக்கை இல்லை, வெள்ளறிக்காய் தருவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஸ்டாலின் தமிழக துணைமுதல்வராகப் பதவிவகித்தபோது, வெளிநாடு சென்றார். அதுகுறித்து வெள்ளையறிக்கையை அப்போதிலிருந்து கேட்டு வருகிறோம் திமுக வினர் இன்னமும் தரவில்லை என அதிமுக அமைச்சர்கள் கூறிவந்தனர்.
 
இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ஸ்டாலின் துணைமுதல்வராக பதவியேற்ற காலத்தில் வெளிநாடு சென்றபோது, கையெழுத்தானது தான் இப்பொழுதுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் போன்ற அம்சங்கள் எனவும் கூறி அதிமுகவினரை விவரம் புரியாமல் பேச வேண்டாம் என்றார்.
 
இப்படியாக இருபெரும் திராவிட கட்சியினருக்கும் எல்லா விசயத்திலும் கருத்து மோதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு கூட, ஸ்டாலின் தன் பெயரால் பல்வேறு வேதனைகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஒரு நல்ல தமிழ்ப்பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
 
ஸ்டாலினுடைய பெயர், அவருக்கு எப்படி வந்தது என்பதையும், அந்தப் பெயரை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி எதற்காக தம் மகனுக்கு சூட்டினார் என்பது எல்லோருக்குமே தெரியும்.
 
இந்த நிலையில் அமைச்சரின், ஸ்டாலின் பெயர் குறித்த விமர்சனத்தை யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்படியிருக்க இன்று, அமைச்சர் காமராஜ், தளபதி என பெயர் வைத்ததால் அடிக்கடி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தெரிந்தோ தெரியாமலோ தளபதி எனப் பெயர் வைத்ததால் தன்னை போர்படை தளபதி என மு.க. ஸ்டாலின் எண்ணுகிறார் என விமர்சித்திருக்கிறார்.
 
ஆளும் கட்சியினர் கொண்டுவரும் அத்தனை சட்டங்களையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகளும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில், சாதாரண மக்களின் நிலையில் இருந்து கேள்வி கேட்கமுடியாத பட்சத்தின் ஆளுங்கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தான் கேள்வி எழுப்ப முடியும்.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்று கூறியதற்கு, அதிமுக கட்சியினர் எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை. அதற்கு எதிர்க்கட்சிகள் தான் குரல் கொடுத்தனர். ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிகப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள்தான் குரல் கொடுத்தனர். அப்படி மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டத்திற்கு மக்களின் சார்பில் குரல் கொடுப்பதும், போராட்டத்தில் ஈடுபடுவதும் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் சரியாகத்தான் செயல்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார். ஒருவேளை, அடுத்த சட்டசபைத் தேர்தலின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமாகவதற்குக் கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
 
ஆகவே, மக்களின் நலன் சார்ந்து கருத்துள்ள விசயத்தில் அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் பேட்டியோ, அறிக்கையோ, கொடுத்தால் ஊடகத்தில் நன்மையான ஆக்கப்பூர்வமான விஷயங்கள்  மக்களின் காதுகளுக்குப் பயனுள்ளதாகப் போய்சேரும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இன்று எல்லோர் கைகளிலும் செல்போன் இண்டென்நெட் வசதி உள்ளது. ஒருதடவை பேசினால் அதே நொடியில் எல்லோரது கைகளிலும் நேரலையாக செய்திகள் அப்டேட்  ஆகும் என்ற விழிபுணர்வு எல்லோருக்கும் இருந்தால் சரி!

இதில், முக்கியமாக, அரசியல்வாதிகள் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தி பெரிய விசயங்களில் எல்லோரும் கோட்டைவிடுவதுதான் மக்களின் எதிர்பார்ப்புகளின் மீதான ஏமாற்றத்திற்கு  காரணமாக இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்