என் மீது தெரிவிக்கும் விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் என்றும் குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கிப் பேசுவது அதிகமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தனி நபர்களை தாக்கி பேசுவது தற்போது தொடங்கி இருப்பதாகவும், தனிநபர்களைத் தாக்கி பேசுவது மட்டுமல்லாது ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார். அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.