மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்த நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறக்கூடிய அளவுக்கு கூட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெறவில்லை. மொத்தமாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு வெறும் 50 இடங்கள்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக 400க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஈவிஎம் குறித்த புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தில், "எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது என்று கூற முடியாது. வாக்கு சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.