தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையேற்றம் அதிர்ச்சியளித்த நிலையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு, பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் ரூ.370க்கு விற்று வந்த ஒரு மூட்டை சிமெண்ட் கிடுகிடுவென விலை உயர்ந்து ரூ.520க்கு விற்பனையாகி வந்தது. சிமெண்ட் விலையை தொடர்ந்து மேலும் சில கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்தது. மற்ற மாநிலங்களில் சிமெண்ட் விலை குறைவாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் விலை அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சிமெண்ட் விலை குறித்து பேசியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு ” சிமெண்ட் விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுபடுத்த, கடந்த 14ம் தேதி உற்பத்தியாளர்களை அழைத்து பேசினோம். அதன்படி சிமெண்ட் விலை குறைக்கப்பட்டு தற்போது ₹460 ஆக உள்ளது, மேலும் குறைக்க அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.