கோவை அருகே ஆசிரியர்கள் அடித்ததால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த பாபு14) வெங்கடாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான்.
ஒரு மாதத்துக்கு முன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இருந்து வெளியே செல்லும் போது பாபுவை வகுப்பில் யாரும் பேசாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
பாபுவும் அதன்படி பேசிய 3 மாணவர்களின் பெயரை பலகையில் எழுதியுள்ளான். ஆசிரியர் திரும்பி வந்தவுடன் அந்த 3 பேரையும் அடித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்த மூன்று மாணவர்களும் ஆசிரியரை சந்தித்து, பாபு உங்களையும் ஒரு ஆசிரியையும் இணைத்து பேசுவதாக புகார் செய்துள்ளனர்.
ஆசிரியர் இதுபற்றி மற்ற 2 ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் பாபுவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பாபு கடந்த 1 மாதங்களாகவே மனவேதனையுடன் இருந்துள்ளான்.
திடீரென்று ஒரு நாள் காலை நேரத்தில் பாபு வீட்டில் சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளான். அதைக்கண்ட அவனது பெற்றோர்கள், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.