ரூ.10 கூடுதல் விலை வைத்த விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்..!

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (22:58 IST)
சேலம் மண்டலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூடுதலாக ரூ.10 விலை வைத்து விற்பனை செய்த 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் கூடுதலாக ரூ.5 விலை வைத்து விற்பனை செய்த 17 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில், சேலம் மண்டலத்தின், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைக்கட்டு மற்றும் காட்பாடி வட்டங்களில் செயல்படும் மதுபான சில்லரை விற்பனை கடைகளில், அரசின் உத்தரவினை மீறி மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக வரப்பெற்ற புகார்களின் பேரில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி,இ.ஆ.ப., அவர்களின் அறிவுரையின்படி, சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட மேலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உதவி மேலாளர் (கணக்கு) குழுவினர் ஆகியோரால், மேற்படி இரண்டு வட்டங்களில் செயல்படும் சில்லரை விற்பனை மதுபானக் கடைகளில் அரசின் உத்தரவினை மீறி மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தொடர்பாக 02.09.2024 ஆம் தேதியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தணிக்கையில் ரூபாய் 10/- கூடுதல் விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், 2 பணியாளரை விசாரனையினை எதிர் நோக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 5/- கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 17 பணியாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளிலும் அதிக பட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்