அடுத்தடுத்து நிகழும் செல்போன் கொலைகள்: பீதியில் கோவை மக்கள்!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:20 IST)
கோயம்புத்தூர் பகுதிகளில் தொடர்ந்து செல்போன் திருட்டும், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

முன்பெல்லாம் நகை, பணம் போன்றவற்றை தனியாக எடுத்து செல்வதில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தன. ஆனால் இன்றைய காலத்தில் செல்போனோடு தனியாக சென்றாலே ஆபத்து என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் செல்போன்களின் விலையேற்றமும் மக்களின் செல்போன் மீதான ஈர்ப்பும் செல்போன் திருட்டு அதிகரிக்க காரணமாகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல் செல்போனை திருட முயன்றிருக்கிறார்கள். அந்த இழுபறியில் தமிழ்செல்வன் அலறவே கத்தியால் அவரை குத்திவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியுள்ளது. இதில் காயமடைந்த தமிழ்செல்வன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்றைய நாளிலேயே அரசூர் பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மகாலிங்கம் என்ற இளைஞரை முதுகில் குத்தி அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். தொடரும் செல்போன் திருட்டு மற்றும் கொலை சம்பவங்களால் கோயம்புத்தூர் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த தொடர் சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்