பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: பின்னணியில் நடந்தது என்ன?

J.Durai
திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:28 IST)
அமைச்சரவை மாற்றம் குறித்து, சமீபத்தில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், 'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' என, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
 
ஆனால், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், மாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுஉள்ளன
 
இதன் பின்னணி குறித்து, தி.மு.க., மற்றும் தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
 
அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் மற்றும் மனோ தங்கராஜ் பதவி பறிப்பு தான். ஏனெனில், சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த போது, அவரை, 'வெளியில் போ' என்று கூறியவர் பொன்முடி. அவர் தொடர்ந்து, கவர்னரை ஒருமையில் விமர்சித்து வந்தார்.
 
இது, உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, முதல்வரிடம் கல்வியாளர்கள் தெரிவித்தனர். தற்போது, பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுகின்றன. துணைவேந்தர் நியமனத்திலும் இழுபறி நீடிக்கிறது.
 
இதே நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்; கல்வி தரம் குறையும் என்பதால், கவர்னருடன் சுமூக நிலையை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தான், பொன்முடியிடம் இருந்து, உயர்கல்வி துறை பறிக்கப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
பிரதமர் மீது விமர்சனம்
 
மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில், பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதில், கவனம் செலுத்திய அளவுக்கு, தன் வசமிருந்த பால் வளத்துறையின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை. மாவட்டத்தில் கட்சியினரை அரவணைத்து செல்லவில்லை.
 
நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார். மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்கு அமைச்சரே ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீதும் உரிய பதில் அளிக்கவில்லை.
 
ஆவின் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இப்பிரச்னையை மூடிமறைக்க ஆர்வம் காட்டினார். துறையின் முக்கிய அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, தன் இஷ்டத்திற்கு ஒப்பந்ததாரர் தேர்வில், அவரது மகன் கவனம் செலுத்தினார்.
 
இதை, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், நிதித்துறையின் உயர் அதிகாரி வாயிலாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஆதாரபூர்வமான தகவல்கள் காரணமாக, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 
 
மரக்காணம், செய்யூர் போன்ற இடங்களில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பின், அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கடி துவங்கியது.
 
கேக் ஊட்டிய சர்ச்சை
 
கள்ளச்சாராய வியாபாரிக்கு அமைச்சர் மஸ்தான், 'கேக் ஊட்டி விடும் போட்டோ'வை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
 
கள்ளச்சாராய வியாபாரியுடன், மஸ்தான் குடும்பத்திற்கு இருந்த நெருக்கம்; கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் குடும்பத்தினர் தலையீடு; அ.தி.மு.க.,வினருக்கு அரசு வேலைகள் ஒதுக்கியது ஆகியவற்றை, அதிருப்தியாளர்கள், கட்சியின் தலைமை கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
 
இறால் பண்ணையில் பெருமளவு முதலீடு செய்திருப்பதும், தலைமையின் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
 
கணவர் தலையீடு
 
சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கட்சியினருடனும் சுமூக உறவு இல்லை. இதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கயல்விழியிடமிருந்து ஆதி திராவிடர் நலத்துறை பறிக்கப்பட்டு, மனிதவள மேலாண்மை துறை வழங்கப்பட்டு உள்ளது.
 
துறையில், இவரது கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாக, புகார் எழுந்ததால், அவருக்கு துறை மாற்றப்பட்டுள்ளது. கயல்விழி தேவேந்திர குல வேளாளர் வகுப்பை சேர்ந்தவர். அந்த சமூகத்தினர் தங்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, அவர் மாற்றப்பட்டதும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மதிவேந்தனுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
 
சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மஸ்தான் நீக்கப்பட்டதால், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நாசருக்கு, மீண்டும் யோகம் அடித்துள்ளது. அவர் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜிக்கு மின்துறை எதிர்பார்த்தது தான்.
 
தி.மு.க., ஆட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கட்சியில், 23 எம்.எல்.ஏ.,க்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், மூன்று பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
பட்டியல் இனத்தை சேர்ந்த, 19 பேர் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தும், மூன்று பேருக்கு தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், கூட்டணி ஆட்சி என்று வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
அதைத் தொடர்ந்து, வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி.செழியனுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்