ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

Mahendran
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (13:51 IST)
ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு என மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து மோசமானது என்றும், எனவே அவருடைய நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு தருவதாக மகாராஷ்டிரா மாநில ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்வாட் என்பவர் பேசினார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி ஈரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
 
சஞ்சய் கெய்வாட் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
முன்னதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்வாட் இதுகுறித்து கூறியபோது, ‘ராகுல் காந்தி தனது அமெரிக்கப் பயணத்தின் போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேசினார், இது காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலையை வெளிக்காட்டுகிறது. எனவே ராகுல் காந்தியின் நாக்கை யார் துண்டித்தாலும், நான் ரூ. 11 லட்சம் பரிசாக வழங்குவேன்," என அவர் கூறியுள்ளார்.
 
மேலும் ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்யும் கருத்துகள் என்றும், மராத்தியர்கள், தங்கர்கள், மற்றும் ஓபிசி சமூகத்தினர் இடஒதுக்கீட்டுக்காக போராடி வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி இவ்வாறு இடஒதுக்கீட்டின் பலன்களை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேசுவது ஆச்சரியமாக உள்ளது," என அவர் கண்டனம் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்